‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுஷ்மாவின் உரையாடல்’ : வழக்கறிஞர் ஹாரிஸ் உருக்கம்..!

‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுஷ்மாவின் உரையாடல்’ : வழக்கறிஞர் ஹாரிஸ் உருக்கம்..!
‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுஷ்மாவின் உரையாடல்’ : வழக்கறிஞர் ஹாரிஸ் உருக்கம்..!
Published on

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தன்னுடன் போனில் உரையாடியதாக வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே உருக்கமாக தெரிவித்துள்ளார்.

67 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தன்னுடன் போனில் பேசியதாகவும், அது மிகவும் உருக்கமான ஒன்று எனவும் வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள தகவலில், “நான் நேற்றிரவு 8.50 மணிக்கு சுஸ்மா அவர்களிடம் பேசினேன். அது மிகவும் உணர்ச்சி பூர்வமானது. அவர் எனக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தை தர வேண்டும் என தெரிவித்தார். நான் கட்டாயம் வந்து எனது கட்டணத்தை வாங்கிக்கொள்கிறேன் என்றேன். அவர் என்னை நாளை (புதன்) மாலை ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு தெரிவித்தார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் இந்தியக் கப்பல்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் தூக்கு தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தான் தங்கள் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது.

அத்துடன் அதுவரை குல்பூஷன் ஜாதவை தூக்கிலிடக் கூடாது எனவும் உத்தரவிட்டது. இது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கில் இந்தியா சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே. சுஸ்மா சுவராஜின் பரிந்துரையின்படியே அவர் இந்த வழக்கில் ஆஜரானார். அதற்காக ரூ.1 மட்டுமே கட்டணம் பெறுவதற்கும் அவர் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com