கேரளாவில் நாகப்பாம்பு கடித்ததில் கோமா நிலைக்கு சென்ற 'வாவா சுரேஷ்' மீண்டும் பேசத் தொடங்கினார்.
சில நாட்களுக்கு முன்பு நாகப்பாம்பு கடித்து சுய நினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷுக்கு, சிகிச்சை பலனளிக்கும் நிலையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் அவர் பேசத் தொடங்கினார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான சுரேஷ், 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். குறிப்பாக ராஜ நாகங்களை பிடிப்பதில் கைதேர்ந்தவர். இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தின் குறிச்சி என்ற இடத்தில் நாகப்பாம்பு ஒன்றை பிடித்து சாக்குப் பையில் போடும்போது சுரேஷை அந்த பாம்பு கடித்தது. தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட முதற்கட்ட சிகிச்சையை தொடர்ந்து அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாம்பு கடிக்கு சுரேஷ் ஆளாவது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே நூற்றுக்கும் அதிகமான முறை தம்மை பாம்புகள் தீண்டியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். பல முறை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்று நலமுடன் திரும்பியிருப்பதாகவும் சுரேஷ் தெரிவித்திருக்கிறார். அவரது நம்பிக்கை இந்த முறையும் நிறைவேற வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த பிரபலங்களும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் நினைவுக்கு திரும்பியுள்ளார்.
பாம்பு பண்ணையில் அரசுப்பணி கிடைத்தபோதிலும் அதனை நிராகரித்த சுரேஷ், பாம்புகளிடம் இருந்து மக்களை காப்பதே தனது முதற்பணி எனக் கூறியவர்.