நிறங்களின் அடிப்படையில் பூஞ்சை தொற்றுகளை வகைப்படுத்த வேண்டாம்: எய்ம்ஸ் இயக்குநர் கருத்து

நிறங்களின் அடிப்படையில் பூஞ்சை தொற்றுகளை வகைப்படுத்த வேண்டாம்: எய்ம்ஸ் இயக்குநர் கருத்து
நிறங்களின் அடிப்படையில் பூஞ்சை தொற்றுகளை வகைப்படுத்த வேண்டாம்: எய்ம்ஸ் இயக்குநர் கருத்து
Published on

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நபர்களுக்கு, கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சை தொற்று பரவலாக உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொற்று முகார்மைக்கோஸிஸ் என சொல்லப்பட்டாலும்கூட, பெயரளவில் இது கருப்பு பூஞ்சை தொற்று என்றே அதிகம் பேரால் குறிப்பிடப்படுகிறது. இதேபோல கேன்டிடியா என்ற பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் பாதிப்பு வகையை, வெள்ளை பூஞ்சை தொற்று என குறிப்பிடப்படுகின்றனர். கருப்பு – வெள்ளை பூஞ்சைகளைத் தொடர்ந்து, மஞ்சள் தொற்று என்றொன்றும் நேற்றைய தினம் நோயாளி ஒருவருக்கு கண்டறியப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இப்படி வெவ்வேறு நிறங்களை கொண்டு தொற்று பாதிப்புகளை குறிப்பிடுவது, மக்களிடையே தொற்று பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தும் எனக்கூறி, 'தொற்றை அதன் பெயரால் குறிப்பிடவும்’ என கூறியுள்ளார் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் கலீரியா. அந்தவகையில், கருப்பு பூஞ்சை தொற்று என்ற வார்த்தைக்கு பதிலாக, முகார்மைகோஸிஸ் என்று அதை குறிப்பிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“பூஞ்சை தொற்றுகளில், கேன்டிடா – அஸ்பெர்ஜிலோஸிஸ்  - க்ரிப்டோகோக்கஸ் - ஹிஸ்டோப்ளஸ்மோஸிஸ் மற்றும் காசிடியோமைக்கோஸிஸ் என பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் முகார்மைக்கோஸிஸ், கேன்டிடா மற்றும் அஸ்பெர்ஜிலோஸிஸ்  வகை பாதிப்புகள் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும் நபர்களின் உடலில் கண்டறியப்படுகிறது. இவைதான் கருப்பு, வெள்ளை, மஞ்சள் நிற பூஞ்சைகள் என குறிப்பிடப்படுகின்றன. இப்படி நிறைய வகை பூஞ்சை தொற்றுகளில், ஒவ்வொரு தொற்றும், அது பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிக்கேற்ப நிறத்தை மாற்றி மாற்றி வெளிப்படுத்தும். அப்படியிருக்கும்போது நோயை, அதன் பாதிப்புகளின் வழியாக பிரித்து கூறுவதே சரியாக இருக்கும். அதற்கு அதன் நிறத்தை குறிப்பிடாமல் இருப்பது அவசியம். இல்லையென்றால், வீண் குழப்பமும் வதந்திகளும் ஏற்படக்கூடும்” எனக்கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நோய் பாதிப்புகள் பற்றி அவர் கூறுகையில், “இவற்றில் முகார்மைக்கோஸிஸ் வகை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளனர். எனினும் இந்த பூஞ்சை பாதிப்பு, கோவிட் போல தொற்றுநோய் கிடையாது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இது பரவுவதில்லை.

அதேபோல கொரோனா பாதித்தோருக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் தெரபிக்கும் இந்த தொற்றுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இந்த முகார்மைகோஸிஸால் பாதிக்கப்பட்டவர்களில், 90 முதல் 95 சதவிகிதம் பேர், சர்க்கரை நோயாளிகளாகவோ ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டவர்களாகவோ இருக்கின்றனர். இவை இரண்டும் இல்லாதவர்களுக்கு, முகார்மைக்கோஸிஸ் பாதிப்புக்கான வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கிறது. பிற பாதிப்புகளான கேன்டிடா, ஆஸ்பெர்கிலோஸிஸ் பாதிப்புகளும் சர்க்கரை நோயாளிகளுக்கும், ஸ்டீராய்டு அதிகப்படியாக எடுப்பவர்களுக்குமே கண்டறியப்பட்டு வருகிறது.

முகார்மைக்கோஸ்கான அறிகுறிகளாக, ஒருபக்க முகம் மட்டும் வீங்குதல் – தலைவலி – மூக்கு அல்லது சைனஸ் பகுதியில் வலி, வாயின் மேற்பகுதி அல்லது மூக்குப்பகுதியில் கருப்பு நிறத்தில் அடுத்தடுத்து புண், காய்ச்சல் போன்றவை உள்ளன. அதேபோல முகார்மைக்கோஸ், நுரையீரல், கண்கள், இரைப்பை, குடல், மூளை போன்ற பகுதிகளை பாதிக்கும்.

இந்த முகார்மைக்கோஸிஸ் பாதிப்பு பல உடல் உறுப்புகளை பாதிக்கிறது என்றபோதிலும், எந்தப் பகுதியை இது பாதிக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து, அது பிரிக்கப்படுகிறது. அதன்படி, ரைனோ ஆர்பிட்டல் செரிபரல், பல்மனரி முகோர்மைக்கோஸிஸ் என பிரிக்கப்படுகிறது.

கேன்டிடா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, வாய், நாக்கு, வாய் துவாரங்களில் வெள்ளை திட்டுகள் அறிகுறிகளாக ஏற்படும். இது பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் ரத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பிறப்புறுப்பு, ரத்தத்தில் பாதிப்பு ஏற்பட்டால், அது மிக தீவிர பாதிப்பாக மாறும். அப்போது, கருப்பு நிற பூஞ்சை தொற்றைவிட இது ஆபத்தானதாக மாறும்” எனக்கூறியுள்ளார்.

தகவல் உறுதுணை : News 18

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com