விதிகளை மீறி நிலக்கரி சுரங்கம் ஒப்பந்தம் செய்யப்பட்ட வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மதுகோடா பதவி வகித்தபோது, மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதில் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மதுகோடா உள்ளிட்ட ஆறு பேரை குற்றவாளிகள் என அறிவித்த சி.பி.ஐ நீதிமன்றம் இன்று தண்டனை விவரத்தை அறிவித்தது. மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையோடு, 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.