ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக பாஜக எம்பி வெங்கடேஷ் கூறியுள்ளார்.
ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிந்தபின் ஆந்திர அரசின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். இதையடுத்து அமராவதியை பிரம்மாண்டமாக உருவாக்குவதற்கும், அரசு கட்டடங்களை நவீன மற்றும் பாரம்பரியமிக்கதாகக் கட்டவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி ஆட்சியை இழந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
இதனிடையே, அமரவாதியை தலைநகராக தேர்வு செய்தது குறித்து ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. அமராவதி தலைநகருக்கு ஏற்ற இடமல்ல என்று ஆந்திரப் பிரதேச அமைச்சர் சத்யநாராயணா போஸ்டா சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக பாஜக எம்பி வெங்கடேஷ் கூறியுள்ளார். ஆந்திராவின் தலைநகரை அமராவதியில் இருந்து மாற்றுவது குறித்த தன்னுடைய திட்டத்தை மத்தியில் உள்ள பாஜக தலைவர்களிடம் ஜெகன் தெரிவித்ததாக அவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு விதமாக விஜயநகரம், காக்கிநாடா, குண்டூர் மற்றும் கடப்பா ஆகிய நான்கு இடங்களில் தலைநகரை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.