மத்திய அமைச்சர் கிரிராஜ், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பேச்சு!

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஆகியோர் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் எதிர்ப்பினை கிளப்பியுள்ளது.
முதல்வர் ஹிமந்த பிஸ்வா -அமைச்சர் கிரிராஜ் சிங்
முதல்வர் ஹிமந்த பிஸ்வா -அமைச்சர் கிரிராஜ் சிங் முகநூல்
Published on

நமது இந்திய அரசியலமைப்பு சாசனமானது, இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று குறிப்பிடுகிறது. இங்கு தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உன்டு. அனைத்து மதங்களும் சமம் என்ற விழுமியமும் உண்டு. அப்படி இருக்கையில் அண்மை காலமாக, “மதவாத அரசியலை கையில் எடுத்து, நாட்டை ஆளும் தலைவர்களே சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பிரிவிணைவாதத்தை வளர்க்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டு அதிகமாக எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

இந்த வகையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “1947-ல் அனைத்து முஸ்லிம்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருந்தால் நாட்டின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்” என்று தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையையும் பலதரப்பினரிடையே எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. இதை அவர் ஆர்.எஸ்.எஸ்-ன் Panchjanya (பாஞ்சஜன்யா) என்ற இதழிலும் தற்போது தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரத்தில், “பள்ளிக்கூடங்களில் சூர்ய நமஸ்காரம் செய்யவோ, சரஸ்வதி பூஜை செய்யவோ, இந்துக்கடவுள்களின் பாடல்களை பாடவோ அரசு நிர்பந்திக்க கூடாது” என இஸ்லாமிய அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து அவர் பேசுகையில், “இது இந்த நாட்டின் துரதிர்ஷ்டம். 1947-ல் நமது முன்னோர்கள் சிலர் மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டபோது அனைத்து முஸ்லிம்களையும் நம் முன்னோர்கள் யாரேனும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், தற்போது நாட்டின் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டதெனில், இங்கு முஸ்லீம்கள் இருக்க அனுமதித்தது ஏன்? இன்று வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுபவர்கள் சனாதனம் மீது கலாசார தாக்குதலை நடத்துகிறார்கள். அன்றே அவர்கள் பிரிக்கப்பட்டிருந்தால் இன்று இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள்.

முஸ்லிம்களை இங்கு வாழ அனுமதித்தது மிகப்பெரிய தவறு. மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் ஏன் இங்கு இருக்க அனுமதித்தார்கள்? அவர்கள் இங்கு வாழ அனுமதிக்கப்படாவிட்டால், இந்த நிலைமை உருவாகியிருக்காது” என்று வெறுப்பை தூண்டும் வகையில் தெரிவித்தார்.

‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என அரசியலைப்பு வலியுறுத்தும் நிலையில், இந்தியாவிலிருந்து ஒரு மதத்தினரை பிரித்து பேசும் இதுபோன்ற கருத்துகளை கூறுவோரை ஆளும் அரசும், அவர் சார்ந்த கட்சியின் தலைமையும் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்’ என்கின்றன எதிர்க்கட்சிகள்.
முதல்வர் ஹிமந்த பிஸ்வா -அமைச்சர் கிரிராஜ் சிங்
கடலூர்: 3 பேரை கொலை செய்து எரித்த வழக்கில் திடீர் திருப்பம் - இருவர் கைது... பரபரப்பு வாக்குமூலம்

இவர் இவ்வாறு பேசவது புதிதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் முசாபர்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “முஸ்லிம்களும் எனக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களுக்காக வேலை செய்வதில் எனக்கும் விருப்பமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்களுக்கு எதிராக ஒருபோதும் பாரபட்சம் காட்டவில்லை என்றாலும், எங்கள் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டுமென நினைத்து அவர்கள் வழி தவறிவிட்டனர். அவர்கள் சனாதன தர்மத்தை பலவீனப்படுத்துகின்றனர்” எனப் பேசினார்.

இதே போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை, அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாவும், ராஞ்சியில் கடந்த 17 ஆம் தேதி (நேற்று முன்தினம்) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் என்பதும் வேதனை.

அசாம் முதல்வர் பேசுகையில், “மாறிவரும் மக்கள் தொகை எனக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அசாமில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை 40 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 1951-ம் ஆண்டு அது 12 சதவீதமாக இருந்தது. இன்னொருபக்கம், நாங்கள் பல மாவட்டங்களை இழந்துவிட்டோம். இது எனக்கு அரசியல் பிரச்னை இல்லை. வாழ்வா சாவா பிரச்னை” என்று தெரிவித்துள்ளார்.

இவர்களின் இந்த தொடர் சர்ச்சைக் கருத்துக்கள் பலத்தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் இத்தகைய கருத்துகளை, இந்தியா போன்றொரு மதச்சார்பற்ற நாட்டில் ஆட்சியாளர்கள் பேசுவது கவலையும் அதிர்ச்சியும் அளிக்கிறது’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com