மகாராஷ்டிராவில் பூட்டி கிடந்த கடைக்குள் காதுகள், மூளை, சிதைந்த முகப் பாகங்கள் கண்டறியப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ளது நாகா பகுதி. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ் தளத்தில் ஒரு கடை அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் கடை பூட்டியே இருக்கிறது. இதனிடையே, இந்த கடைக்குள் இருந்து கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்தக் குடியிருப்புவாசிகள் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
இதன்பேரில், அங்கு வந்த போலீஸார் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அங்கு ஏராளமான உடைந்த மரக்கட்டைகள் இருந்திருக்கின்றன. அதற்கு நடுவே இரண்டு பிளாஸ்டிக் கன்டெய்னர்கள் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்த கன்டெய்னர்களை திறந்து பார்த்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம், அங்கு 8 மனித காதுகள், ஒரு மூளை, சிதைந்த முகப் பாகங்கள் ஆகியவை இருந்துள்ளன. அவையாவும் ஒருவித ரசாயனத்துக்குள் வைக்கப்பட்டிருந்தன. வெகு நாட்கள் ஆனதால் அவை அழுகத் தொடங்கி துர்நாற்றம் வீசியிருக்கிறது.
இந்நிலையில், அந்தக் கடையின் உரிமையாளரை போலீஸார் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர், தான் கடைக்கு வந்தே பல ஆண்டுகள் ஆவதாகவும், அந்த உடல் பாகங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கடைக்குள் இருந்த உடல் பாகங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாக வெட்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கடையின் உரிமையாளரின் இரண்டு மகன்களும் மருத்துவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை, தங்கள் ஆராய்ச்சி நிமித்தமாக அவர்கள் அவற்றை எடுத்து வந்தார்களா எனத் தெரியவில்லை. இந்த காரணத்தால் இப்போதைக்கு கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே உண்மை தெரியவரும்" என்றார்.