ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலரும், பொறியாளரும், கல்வி சீர்திருத்தவாதியுமான அம்மண்ணைச் சேர்ந்த சோனம் வாங்சுக், கடந்த மார்ச் 6 அன்று, பூஜ்ஜிய வெப்பநிலையில் கடல் மட்டத்திலிருந்து 3,500 மீட்டர் உயரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
மேலும், இமயமலைப் பகுதியின் சூழலியல் மற்றும் பனிப்பாறைகளுக்கு தொழில்மயமாக்கலால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இவரது போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் திரண்டனர்.
இந்த நிலையில், சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த மார்ச் 28ஆம் தேதியுடன் அதாவது, 21-வது நாளுடன் நிறைவு செய்வதாக அறிவித்தார். அப்போது பேசிய அவர், "உடல்நிலை மோசமடைந்து வருவதால், எனது ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தை முன்கூட்டியே முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்பேரில், முதற்கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவடைவதாகவும், ஆனால் தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்த உண்ணாவிரதத்தின் முடிவு, போராட்டத்தின் புதிய கட்டத்தின் தொடக்கம்" என்று வாங்சுக் தெரிவித்தார்.
மேலும் அவர், ”தெற்கில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் மற்றும் வடக்கில் சீன ஆக்கிரமிப்புகளால் பிரதான மேய்ச்சல் நிலத்தை இழக்க நேரிடுகிறது. லடாக்கைச் சேர்ந்த 10,000 மேய்ப்பர்கள் மற்றும் விவசாயிகளுடன் சீன எல்லையை நோக்கிய பயணத்தை விரைவில் (ஏப்ரல் 7) நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார். அதாவது, ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மறைந்த தேசத் தந்தை மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையைப் போன்று, ‘பஷ்மினா’ என்ற அணிவகுப்பை நடத்த சோனம் வாங்சுக் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், லடாக்கின் லே மாவட்டத்தில் ஊர்வலங்கள், அணிவகுப்புகள், பேரணிகளை நடத்த 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. சோனம் வாங்சுக்கின் பஷ்மினா திட்டத்தைத் தடுத்து நிறுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சோனம் வாங்சுக், “அமைதியான லடாக் தற்போது மிகவும் குழப்பத்தில் உள்ளது. 31 நாட்கள் மிகவும் அமைதியான பிரார்த்தனைகள் மற்றும் விரதங்களுக்குப் பிறகு நிர்வாகத்தின் திடீர் அமைதி முயற்சிகள் எல்லாவற்றையும்விட ஆபத்தானதாகத் தெரிகிறது” என தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
”லடாக்கிற்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையை அமல்படுத்த வேண்டும்” என்பதுதான் அவரது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. இதன்மூலம் நிலப் பாதுகாப்பு மற்றும் பழங்குடியின பகுதிகளுக்கு சுயாட்சி உறுதி செய்யப்படும்.