பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் போது அவர்களின் மொத்த வட்டியையும் சேர்த்து தள்ளுபடி செய்ய வேண்டுமென வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திலும், ஆந்திர பிரதேசத்திலும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டபோதும் வட்டித்தொகை இன்னமும் தள்ளுபடி செய்யாத சம்பவத்தை வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி நினைவுகூர்ந்துள்ளது.
தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு ரூ.6000 கோடிக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் ரூ. 3,200 கோடி வட்டியை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்தனர். உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட இன்னும் சில மாநிலங்களும் வட்டியை சேர்த்தே தள்ளுபடி செய்துள்ளன என தேசிய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
பயிர்க்கடனை மட்டும் தள்ளுபடி செய்துவிட்டு வட்டியை தள்ளுபடி செய்யாமல் போவதால் வங்கியின் வழக்கமான பண சுழற்சி முறை பாதிப்படையும். வட்டியை தள்ளுபடி செய்யாத சமயத்தில் அது வாராக்கடனாகவே இருப்பதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வங்கி கடனை தள்ளுபடி செய்யும் அரசுகள் அந்தகடனை சமாளிக்கும் அளவிற்கு கஜானாவில் தொகை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டுமென்று வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி தெரிவித்துள்ளது.