‘உங்கள் பொறுப்பற்ற செயலால் மனப்பிறழ்வு’: காக்னிசன்ட் மீது 3 ஆயிரம் ஊழியர்கள் வழக்கு !
காக்னிசன்ட் நிறுவனம் தங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறி அதன் மூவாயிரம் ஊழியர்கள் நஷ்ட ஈடு வழங்கக் கோரி அந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
முன்னணி ஐ.டி நிறுவனமான சிடிஎஸ் எனும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், தனது பணியாளர்களில் 7,000 பேர் வரை பணிநீக்கம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவெடுத்தது. காக்னிசன்ட் நிறுவனம், சிக்கன நடவடிக்கையின் மூலம் வருமானத்தை உயர்த்துவதற்குத் திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக, அந்நிறுவனத்தில் பணியாற்றும் நடுத்தர மற்றும் சீனியர் பிரிவைச் சேர்ந்த 10,000 முதல் 12,000 பணியாளர்கள் வரை, தற்போதுள்ள பணிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்நிறுவனம் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சில பணிகளைச் செய்துகொடுக்கிறது. அந்தப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, 2020 முதல் சில வர்த்தங்களை குறைத்துக்கொள்ளவும் காக்னிசன்ட் முடிவெடுத்துள்ளது.
பணிகளைக் குறைத்துக்கொள்ளும்போது, அதில் பணியாற்றிவரும் 6,000 பணியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தப் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதற்காக, காக்னிசன்ட் நிறுவனத்தோடு தொடர்புடைய மற்ற நிறுவனங்களில் இவர்களைப் பணியமர்த்த முடிவெடுத்துள்ளனர். எனவே, இந்த வகையில் மூவாயிரம் பேரை வேலையை விட்டுச் செல்லுமாறு காக்னிசன்ட் அறிவுறுத்தியது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் மீதும் ஃபேஸ்புக் மீதும் பணிபுரியும் ஊழியர்கள் வழக்குத் தொடர்ந்து நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.
காக்னிசன்ட் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையால் ஊழியர்களுக்கு மனப்பிறழ்வு, உடலில் காயம், மாரடைப்பு, பக்கவாதம், சம்பள இழப்பு, எதிர்காலம் குறித்த அச்சம் ஆகியவை நிகழந்துள்ளதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நிறுவனம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை மார்ச் 7 ஆம் தேதி அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக காக்னிசன்ட் நிறுவனம் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளது.