இந்த தலைமுறை பள்ளிகுழந்தைகளிடம் பழிவாங்கும் உணர்வும், வன்முறையும் அதிகரித்துள்ளது என்பதற்கு சமீபத்திய உதாரணமாக, மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காவது படிக்கும் மாணவரை சக மாணவர்கள் மூன்று பேர் காம்பஸால் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அமைந்துள்ளது.
நவம்பர் 24 மதியம் 2 மணியளவில் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவர்களிடையே நடந்த மோதலில், 3 மாணவர்கள் இணைந்துகொண்டு ஒரு மாணவனை காம்பஸால் 108 முறை தாக்கியுள்ளனர். காயமடைந்த மாணவனுக்கு அருகிலிருந்த மருத்துவமனையில் முதலுதவி செய்துவைத்த பள்ளி நிர்வாகம், அவருக்கு விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
வீட்டிற்கு வந்து தனக்கு நடந்ததை பெற்றோரிடம் விவரித்துள்ளார் பாதிக்கப்பட்ட மாணவர். அதிர்சியடைந்த அவரின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று சிசிடிவி ஆதாரத்தை கேட்டதற்கு, பள்ளி நிர்வாகம் தர மறுத்துள்ளது. இதனை அடுத்து ஏரோட்டோம் காவல் நிலையத்திற்கு சென்று சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவப்பரிசோதனை நடத்தப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், சட்டவிதிகளின் படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பள்ளி நிர்வாகம் சம்பவத்தில் ஈடுபட்ட குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்ட குழந்தைகள் யாரேனும் வன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸ் விளையாடுகின்றனரா எனவும் விசாரித்து வருவதாக அங்கு விசாரணை நடந்த்திவரும் குழந்தைகள் நலக் குழுவினர் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பை ஏற்படுத்திய மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. தற்போதைக்கு காவல்துறையிடமிருந்து சம்பவம் குறித்த ரிப்போர்ட்டை குழந்தைகள் நல குழுவினர் கேட்டுள்ளனர்.
ஒரு குழந்தை சமூகத்தில் நல்ல ஒழுக்கமுள்ள குழந்தையாக, குற்றச்செயல்கள் செய்யாத குழந்தையாக வளர பெற்றோர்களின் பங்கு எந்தளவுக்கு முக்கியமோ, அதேயளவுக்கு பள்ளியும், குழந்தைகளை சுற்றியுள்ள சமூகமும் முக்கியமாகிறது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், கொடூரச்செயலில் ஈடுபட்ட குழந்தைக்கும் உரிய கவுன்சிலிங் வழங்கி, அவர்கள் அனைவரும் சரியான பாதையில் பாதுகாப்பான வாழ உகந்த சூழலை இந்த சமூகமும், பள்ளியும், பெற்றோரும் ஏற்படுத்தி தருவர் / தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!