சிபிஎஸ்இ பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகனின் பள்ளிக்கட்டண உயர்வை குறித்து தந்தை ஒருவர், தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குர்கானில் வசித்து வரும் உதித் பண்டாரி என்னும் நபர், தனது 3 ஆம் வகுப்பு படிக்கும் மகனின் பள்ளிக்கட்டண உயர்வை குறித்து தன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பது பெற்றோரின் நிதிச்சுமையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
அவரது பதிவில், “எனது மகனின் பள்ளி கல்வி கட்டணம் வருடத்திற்கு 10% அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் கட்டண உயர்விற்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகம் எந்த விளக்கமும் தர தயாராக இல்லை. ஆனால், அதிக கல்வி கட்டணத்தை மட்டும் தங்களின் பள்ளி நிர்வாகம் செயலியில் பதிவேற்றி விடுகின்றனர்.
இது குறித்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு, ’தயவு செய்து உங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்’ என்று தெரிவிக்கிறார்கள்.
இந்த பதிவு நிச்சயம் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது! . எனது மகன் குர்கானில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிபிஎஸ்இ பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இவனின் பள்ளிக்கட்டணம், பேருந்து தவிர உணவு உட்பட மாதம் ரூ.30000. இது தொடர்ந்து 10% ஆக அதிகரித்தால் அவன் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது வருடத்திற்கு 9,00,000 நெருங்கும்.” என்று உதித் பண்டாரி என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவிற்கு பயனர்கள் பலர் , தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர்,
” இங்கே டிபிஎஸ்யிலும் அப்படிதான். நீங்கள் எதையும் எதிர்க்க முடியாது. இங்கும் ஒவ்வொரு ஆண்டும் 10% உயர்வு, உயர்த்தப்பட்ட MRP கொண்ட புத்தகங்கள் எழுதுபொருட்களை கூட வழங்குகின்றன. நீங்கள் அதை வெளியில் இருந்து வாங்க முடியாது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் உடை, காலணிகளை மாற்றுகிறார்கள். எனவே யாரும் தங்கள் பழையவற்றை பயன்படுத்த முடியாது.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த பதிவானது தற்போது 8.9 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று தற்போது, சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.