பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் ஆபாச உரையாடல் மேற்கொண்டது தொடர்பாக ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ன் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டார்.
டெல்லிக்கு அருகே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் சேர்ந்து இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ என்ற குரூப் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த குரூப்பில் மொத்தம் 27 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
குரூப்பில் பேசிக்கொண்ட மாணவர்கள் சிலர் பள்ளி படிக்கும் சக மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பாக பேசியுள்ளனர். அத்துடன் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பாகவும் சர்வ சாதாரணமாக பேசியுள்ளனர். அவர்களின் இந்த பேச்சுக்களின் ஸ்கீரின் சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சி அளித்தன. அத்துடன் அந்த சக பள்ளி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும் பகிரிந்துகொண்டனர்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக வெடிக்க, கடுமையான எதிர்ப்பு வலுத்தது. டெல்லி கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போல, மற்றொரு சம்பவம் நடப்பதற்கு முன்பே இந்த மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பலரும் கொந்தளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தனர்.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது நிரம்பிய மாணவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த மாணவன் தான் இந்த குரூப்பை தொடங்கிய அட்மின் ஆவார். இதுதொடர்பாக குரூப்பில் இருந்த மற்ற மாணவர்களிடம் போலீஸார் விசாரித்த போது, தங்களுக்கு அப்படி ஒரு குரூப் ஆரம்பிக்கப்பட்டதே தெரியாது என்று கூறியுள்ளனர். அத்துடன் தங்களை மற்ற நண்பர்கள் சேர்த்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.