சொகுசு கார் வாங்குவதற்காக தன்னை கடத்தியதாக இளைஞர் ஒருவர் நாடகமாடிய சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.
ஹரியானாவின் குர்கான் பகுதியில் வசித்து வரும் இளைஞர் சந்தீப் குமார் (19). 12ம் வகுப்பு படித்து வரும் சந்தீப் கடந்த மாதம் 29ம் தேதி கிரிக்கெட் விளையாடச் சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்த சந்தீப்பின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காணாமல் போன இளைஞரை தேட விசாரணையை முடுக்கிய போலீசுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
சொகுசு கார் வாங்குவதற்காக தன்னை கடத்தியதாக சந்தீப்பே நாடகம் ஆடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையின் படி, கிரிக்கெட் அகாடமியில் இருந்து வெளியேறிய சந்தீப், குப்பை பொறுக்கும் நபரிடம் ரூ.500 கொடுத்து அவரது அண்ணனுக்கு போன் செய்து பேசச் சொல்லியுள்ளார். கடத்தல் நாடகத்தை அரங்கேற்றிய சந்தீப், பிவாடியில் சில நாட்களாக தங்கியுள்ளார்.
பிறகு குர்கானுக்கு வந்துள்ளார் சந்தீப். அவரை அடையாளம் கண்டுக்கொண்ட காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தன்னை யாரோ கடத்தியதாகவும், தான் மயகத்திலேயே சில நாட்கள் இருந்ததாகவும், பிறகு தப்பித்து வந்ததாகவும் கூறியுள்ளார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் குறுக்கு விசாரணை செய்துள்ளனர்.
அதில் சந்தீப் கூறியது பொய் என தெரியவந்தது. சொகுசு கார் வாங்குவதற்காக சந்தீப்புக்கு 3 கோடி தேவைப்பட்டதாகவும், அதற்காகவே அவர் கடத்தல் நாடகம் ஆடியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.