சிறுமிகளின் சமூக வலைத்தளங்களை ஹேக் செய்து, பின்னர் அவர்களிடம் ஆபாச புகைப்படங்களை அனுப்புமாறு மிரட்டி வந்த ஹேக்கரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிளஸ்-2 டிராப் அவுட் இளைஞர் ஒருவர் மாணவிகள் சிலரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமிகளிடம் ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அனுப்புமாறு அந்த நபர் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் சிறுமிகளின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதுபோன்று மொத்தம் 7 புகார்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு வந்துள்ளது.
இதையடுத்து மும்பையிலிருந்த சைபர் கிரைம் தனிப்படை போலீசார் அந்த நபரை டிராக் செய்து பிடித்தனர். அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சிறுமிகளின் சமூக வலைத்தளங்களை ஹேக் செய்ததை ஒப்புக்கொண்டார். அந்த நபர் மொத்தம் 800 பெண்களை இதுபோன்று மிரட்டியுள்ளார். அதில் 700 பேரின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிரட்டி வாங்கியிருக்கிறார். இதையடுத்து அவரது போனை போலீசார் கைப்பற்றினர்.
அவர் மீது சிறுமிகள் பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் சிறுமிகளிடம் மிரட்டி வாங்கி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏதேனும் ஆபாச வலைத்தளத்திற்கு விற்பனை செய்தாரா ? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அல்லது ஏதேனும் ஆபாச வலைத்தளம் நடத்தி வருகின்றாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் அந்த நபர் 20 வயது இளைஞர் என்பதும், அவரது பெயர் அல்ஃபாஸ் ஜமானி என்பதும் தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த இளைஞருக்கு செப்டம்பர் 12ஆம் தேதி வரை, போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.