ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் நேற்று சிறப்பு அந்தஸ்து வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு, பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ததுடன், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து, சமீபத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஜம்மு - காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், ஜம்மு-காஷ்மீரில் புதியதாக பதவியேற்ற தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி சட்டப்பிரிவு 370-யை மீட்டெடுப்பது குறித்த தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தது.
இதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் தெரிவித்து தீர்மான நகலை கிளித்தெரிந்து அமளியில் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், இன்று ஏற்பட்ட சலசலப்பு கைக்கலப்பாகவே மாறியதால் பரபரப்பான சூழல் நிலவியது. வழக்கம் போல இன்று காலையில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது.. அப்போது, மக்களவை எம்பி இன்ஜினீயர் ரஷித்தின் சகோதரர் குர்ஷித் அகமது ஷேக் 370 சட்டப்பிரிவுக்கு தனது ஆதரவை தெரிவித்து பேனரை காண்பித்தார்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இது கைக்கலப்பாகவே மாறியது. இதனால், 15 நிமிடங்களுக்கு சட்டசபையை சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.