உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரும் மனு மீது 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுகிறார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை பதவி நீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர். அந்த மனுவை வெங்கய்ய நாயுடு நிராகரித்த நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த அமர்வுக்கு தலைமை தாங்கும் நீதிபதி சிக்ரி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணிமூப்பு அடிப்படையில் 6ஆவது இடத்தில் உள்ளார். மற்ற 4 நீதிபதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஆனால், தலைமை நீதிபதிக்கு அடுத்ததாக 2 முதல் 5ஆம் இடம் வரை பணிமூப்பில் உள்ள செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோகூர், குரியன் ஜோசப் ஆகிய நீதிபதிகளின் அமர்வில் இந்த விசாரணை ஒதுக்கப்படவில்லை. கடந்த ஜனவரி 12ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து இந்த நான்கு நீதிபதிகளும், இதுவரை முன்னுதாரணம் இல்லாத வகையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தனர்.