தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் ஏன் இத்தனை அவசரம் - தொடரும் போராட்டம்?

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் ஏன் இத்தனை அவசரம் - தொடரும் போராட்டம்?
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் ஏன் இத்தனை அவசரம் - தொடரும் போராட்டம்?
Published on

உச்சநீதிமன்றம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான நீதிபதிகள் அரசியல் அழுத்தம் தொடர்பாக வரலாற்றில் முதன்முறையாக பொதுவெளியில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். இது நாட்டினையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தது சரி, தவறு என விவாதங்கள் நடந்தன. 

அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதே, உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் கொடுத்தார். இதுவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்தப் புகார் திட்டமிட்டு சில வழக்குகளில் இருந்து தடுப்பதற்காக கூறப்பட்டதாக தலைமை நீதிபதியே மறுப்பு கூறினார். தம் மீதான புகார்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய சக்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்த விவகாரத்தில் ரஞ்சன் கோகாய்க்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இருப்பினும், தன் மீதான பாலியல் புகாரை விசாரிக்க நீதிபதி பாப்டே தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை நியமித்து ரஞ்சன் கோகாயே உத்தரவிட்டார். அந்தக் குழுவில், நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், நீதிபதி என்.வி.ரமணா இந்த விசாரணையில் இருந்து விலகினார். ரஞ்சன் கோகாய்க்கு நெருக்கமானவர் என்பதால் தான் விசாரித்தால் சரியானதாக இருக்காது என்று அவர் விளக்கம் அளித்தார். அவருக்குப் பதிலாக, இந்து மல்கோத்ரா குழுவில் இடம்பெற்றார். 

இந்தக் குழுவினர், ரகசிய அறையில், தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. ஆனால், இந்தக் குழுவின் விசாரணைக்கு ஆஜராக போவதில்லை எனப் புகார் அளித்த பெண் தெரிவித்தார். ஆனால், விதிகளின்படி புகார் அளித்த பெண் விசாரணையில் ஆஜராக வேண்டிய கட்டாயம் இல்லையென்று நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுதே, புகார் அளித்த பெண் இல்லாமல் விசாரணை நடத்தக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது.

இருப்பினும், ரகசியமாக தங்களுடைய விசாரணையை நீதிபதி பாப்டே குழு மேற்கொண்டது. புகார் போதிய முகாந்திரம் இல்லையென தள்ளுபடி செய்வதாக தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், சிக்கல் எங்கு உருவானது என்றால், விசாரணை குறித்த விவரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில்தான், தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தினர். இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்று, புகார் அளித்த பெண் இல்லாமல் எப்படி விசாரணை நடத்தலாம். மற்றொன்று, விசாரணை தொடர்பான அறிக்கையை வெளிப்படையாக வெளியிடாதது ஏன்?. 

உச்சநீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இந்தப் போராட்டம் நடைபெற்றது. பெண் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி உச்ச நீதிமன்றத்தைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் நாட்டின் பல இடங்களில் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. 

தலைமை நீதிபதி மீது புகார் அளிப்பட்ட போதும், அந்தப் புகார் குறித்து அவரே சில குற்றச்சாட்டுகளை வைத்த போதும் அவருக்கு ஆதரவாகவே பலரும் குரல் எழுப்பியிருந்தனர். ஆனால், இவ்வளவு அவசரமாக சில வாரங்கள் கூட தாண்டாத நிலையில், உடனடியாக புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், தற்போது, புகார் அளித்த பெண்ணிற்கு ஆதரவாக பலரையும் குரல் எழுப்ப வைத்துவிட்டது.

இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரும், புகார் குறித்து புதிதாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி, மீண்டும் புதிய விசாரணை நடத்தப்படவில்லை என்றால், இந்தப் போராட்டங்கள் பல இடங்களில் தொடரும் என்றே தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com