குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடிமகன் உரிமை தருவதே குடியுரிமை மசோதா ஆகும். மேற்கண்ட 3 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக குடிபெயர்ந்த 6 மதத்தவருக்கு குடியரிமை அளிக்க மசோதா வழி செய்கிறது.
இம்மசோதாப்படி இந்துக்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்ஸிக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தவர்கள் இந்திய குடியுரிமை பெற முடியும். தற்போது இம்மூன்று நாடுகளில் இருந்து வந்த அகதிகள் இந்திய குடியுரிமை பெற குறைந்த பட்சம் 11 ஆண்டுகள் இங்கு வசித்திருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.
ஆனால் இந்த விதி குறிப்பிட்ட 6 மதத்தவருக்கும் 5 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. இது தவிர குடியுரிமை பெற விரும்புபவர்கள் அதற்கான சட்ட உதவிகளையும் பெற மசோதா வழிவகுக்கிறது. எனினும் இம்மசோதாவின்படி 3 நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமிய அகதிகள் குடியுரிமை பெற வழியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அனைவரையும் சமமாக கருதும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் 14ஆவது பிரிவுக்கு இம்மசோதா எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.