நிலமும் மதமும் மனிதனை விழுங்கும் ஒரு துயரகாலத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம், நாடுபிடிக்கும் ஆசையில் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த பலநாடுகள் தங்கள் அண்டைநாடுகளை ஆக்கிரமிக்கின்றன. இது ஒரு புறம் தான்சார்ந்த அல்லது தான் நம்பும் மதத்தின் பலத்தைக் கொண்டு பிறதரப்பினரை உலக வரைபடத்திலிருந்து நிராகரிக்கும் முயற்சியிலும் ஒருகூட்டம் செயல்படுகிறது.
சமகால உலகம் அத்தனை இனிப்பானதாக இல்லை. நம் தலைமுறைக்கு. ஒரு நிலத்தின் குடிமகன் தன்நிலத்தில் வாழமுடியாமல் வெளியேறும் சூழல் உருவாகும்போது அவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள அருகில் உள்ள வேறு தேசத்தின் நிலத்தில் அகதியாக தஞ்சம் அடைகிறான். அப்படி அகதியாக தஞ்சம் அடைகிறவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள் அவர்களை கண்காணிக்க அல்லது பராமரிக்க தனித்தனியாக சட்டதிட்டங்களை வகுத்துள்ளது.
அப்படி அகதிகளாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஒருதேசத்தின் நபர், வேறு தேசத்தின் நிலத்தில் நுழையும்போது அவர்களை எப்போது எதன் அடிப்படையில் தஞ்சம் அடையும் நிலத்தின் குடிமகனாக அங்கீகரிக்கலாம் என சில வரைமுறைகள் உண்டு.
இப்படியாக 1955’ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தின்படி 11 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கும் பிற தேசத்தவர்களை இந்தியக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ள முடியும். தற்போது இந்த சரத்தில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் திருத்தமானது பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது.
நாடு முழுக்க மாணவர்களையும் மனிதஉரிமை ஆர்வலர்களையும் கொதிப்படையச் செய்திருக்கிறது குடியுரிமை சட்டத் திருத்தம். இது சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திருத்தம் என எதிர்கட்சிகள் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
2019 மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்படும் என அறிவித்தது. அதனை தற்போது செயல்படுத்தியுள்ளது அரசு.
என்ன சொல்கிறது திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம்…?
இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.
இந்த திருத்தம் ஒரு சதவிகிதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை, சட்ட விரோதமான எல்லை நுழைவை கட்டுப்படுத்தவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என மத்தியஅரசு விளக்கம் அளித்திருக்கிறது.
இது சிறுபான்மை மக்களுக்கு எதிரான திருத்தம் இல்லை என்றால் இந்த பட்டியலில் ஏன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் சேர்க்கப்படவில்லை….? என எதிர்கட்சிகள் வாதம் வைக்கின்றன.
பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழும் சிறுபான்மை மக்கள் அதாவது முஸ்லீம் அல்லாதவர்கள் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அங்கிருந்து இந்தியா வந்து தஞ்சமடைந்திருக்கும் அவர்களுக்கு இந்த மசோதா ஆறுதலாக அமையும் என கருத்து கூறுகிறது மத்தியஅரசு. அப்படியென்றால்,இலங்கை போரில் துன்பங்களை அனுபவித்து இங்கு தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை…? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய பெருநிலத்தின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் சிறுபான்மையினர் தானே…? அப்படியானால் முஸ்லீம்களையும் தமிழர்களையும் மத்தியஅரசு இந்தியர்களாக நினைக்கவில்லையா…? என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் முஸ்லீம்களை இந்த சட்டத்தின் மூலம் நாடுகடத்த முடியும் என்கிற அச்சமும் எழுந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆம் இந்த சட்டதிருத்தத்தின் படி நாம் அனைவரும் தனித்தனியாக இந்தியாவின் பூர்வகுடிகள் தான் என நிரூபிக்க வேண்டும் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இப்படி குடியுரிமை சட்ட திருத்தம் மாணவர்களை கொதிப்படையச் செய்துள்ளது, டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டத்தின் போது பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த வன்முறையால் தெற்கு டெல்லி முழுவதும் போராட்டக் களமாக மாறியது. ஜாமியா கல்லூரி மாணவர்களோடு இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர், டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக் கூறியும் நாடுமுழுவதும் மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம், மும்பை தமிழகத்தில் சென்னை, மதுரை என நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்துள்ளது.
காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மத சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்கின்றன. இந்து முஸ்லீம் பிரிவினைக்கு துணை போகும் இந்த சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சிவசேனா சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளது. ஆனால் அக்கட்சி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை ஆதரித்திருப்பது நகைமுரண். தமிழகத்தின் ஆளும் அதிமுக அரசும் ஜனநாயகத்திற்கு எதிரானதாக கருதப்படும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது தமிழக மக்களை கொதிப்படையச் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.
இது ஒருபுறம் இருக்க ஏற்கெனவே அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டின் படி 1971-ஆம் ஆண்டு மார்ச் 24’ஆம் தேதிக்கு முன்பு இருந்தே தாங்கள் அஸ்ஸாமில் தான் வசிக்கிறோம் என அங்குள்ள மக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க முடியாதவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் சூழல் உள்ளது.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இரண்டாவது மற்றும் இறுதி வரைவுப்பட்டியலின் படி அதில் 2.89 கோடி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பதிவேட்டில் தங்களை இணைக்க விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.29 கோடி. இதனால், மீதமுள்ளசுமார் 40 லட்சம் பேரின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்படும் அபாயம் உள்ளது. அஸ்ஸாமைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ’முகமது சனா உல்லா’. கார்கில் போரில் பங்கேற்ற இவர் ஜனாதிபதி விருது பெற்றவர். இவரையும் இந்தியர் அல்ல என நிராகரித்துள்ளது தேசிய குடி மக்கள் பதிவேடு.
வடமாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இதனிடையே, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு எனது ஆதரவு உண்டு என்றும், அதே நேரம் நாம் அகிம்சை வழியில் போராட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மாணவர்கள் அமைதியான வழியில் போராட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். வைகோ கூறும்போது, ஏன் அந்த சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்கள் பற்றி குறிப்பு எதும் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதே கேள்வியை ப.சிதம்பரமும் முன் வைத்துள்ளார். தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக இருக்கும் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நாளை திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
மாணவர்களை போலீஸார் கடுமையாக தாக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கும் கனிமொழி, இதனை சகித்துக் கொள்ள முடியவில்லை. இது தான் மாணவர்களை அணுகும் முறையா என கண்டித்திருக்கிறார். இந்திய இறையாண்மைக்கு எதிராக உருவாக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்தை கேரள முதல்வர் பினரயி விஜயனும் எதிர்ப்பதாக அறிவித்திகிறார்.
இது முழுக்க பாசிச நடவடிக்கை என திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப் உள்ளிட்ட இந்திய சினிமா பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
பல்லாயிரம் பேர் வேலையிழப்பு, வெங்காயவிலை உயர்வு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக தொடரும் வன்முறைகள், நாட்டின் உற்பத்தி குறைவு என நாடு அபாயத்தின் விளிம்பில் நின்று மூச்சிதிணறிக் கொண்டிருக்கும் போது மதம் சார்ந்த பிரச்னைகளில் வேண்டுமென்றே தள்ளப் படுவதாக சிலர் விமர்சித்துள்ளனர்.
நிலம் என்பது மக்களின் உரிமை. எல்லைகள் வகுத்து தேசங்களாக பிரித்தது மனிதன்., உண்மையில் உலகம் கன்னி நிலமாக இருந்தபோது அங்கு நாடுகளும் இல்லை மதங்களும் இல்லை. பாஸ்போர்ட் விசா அவசியமின்றி மனிதன் ஒரு பறவையாக உலகை சுற்றி வரும் ஒரு நன்னாளை நோக்கி முன்நகர்வோம்.