நாளை மெழுகுவர்த்தி, அகல்விளக்கை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இந்திய மக்கள் ஊரடங்கிற்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறார்கள். நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைக் குறித்துச் சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாளை மெழுகுவர்த்தி, அகல்விளக்கை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் எனவும் கைகளைச் சோப்பு போட்டு மட்டும் கழுவிவிட்டு விளக்கேற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.