மக்களை மக்களே 'உளவு' பார்க்கும் புதிய திட்டம்: மத்திய அரசின் 'சைபர் கிரைம் செல்' சர்ச்சை!

மக்களை மக்களே 'உளவு' பார்க்கும் புதிய திட்டம்: மத்திய அரசின் 'சைபர் கிரைம் செல்' சர்ச்சை!
மக்களை மக்களே 'உளவு' பார்க்கும் புதிய திட்டம்: மத்திய அரசின் 'சைபர் கிரைம் செல்' சர்ச்சை!
Published on

மத்திய உள்துறை அமைச்சகம் 'சைபர் கிரைம் செல்' என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. நாட்டின் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்களாக பங்கேற்க முடியும். இந்த திட்டத்தின்படி, குழந்தை ஆபாசப் படம், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகள், கருத்துகள், உள்ளடக்கங்களை கண்டுப்பிடிக்கவும், சட்டத்தை மீறும் பிரசாரங்கள், செய்திகள் குறித்து அடையாளம் காணவும் குடிமக்களையே 'சைபர் கண்காணிப்பாளர்'களாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவை குறித்து தன்னார்வலர்களாக நியமிக்கப்படும் குடிமக்கள் ரிப்போர்ட் செய்ய முடியும். சோதனை அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர், திரிபுரா உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வரவேற்பை அடிப்படையாக கொண்டு, இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமானது (I4C) இணைப்புப் புள்ளியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சைபர் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமுள்ளவர்கள் தங்கள் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களிலிருந்து கொண்டே இணையத்தின் வாயிலாக பதிவு செய்யலாம்.

இதில் தன்னார்வலர்களாக பதிவு செய்ய விரும்புவோர் தங்களின் பெயர், தந்தையின் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டும். இருப்பினும் மத்திய அரசானது, எந்த மாதிரியான பதிவுகள் மற்றும் செயல்பாடுகள் தேச விரோதமானவை என்பது குறித்து தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. மேலும், இணையத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ள பிரிவுகளின் கீழ் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதன்மூலம் சைபர் தன்னார்வலர்களுக்கு ஏகபோக அதிகாரம் வழங்கப்படும். அவர்கள் நினைத்தால் எந்தப் பதிவையும் 'தேச விரோத பதிவு' என எளிதாக முத்திரை குத்த முடியும். அதன்வாயிலாக, சம்பந்தப்பட்ட நபரை தேச துரோகி (Anti Indian) என்று அடையாளப்படுத்தலாம். இந்தத் திட்டம் ஆபத்தானது என்றும் பலர் கூறிவருகின்றனர்.

தன்னார்வலர்களாக தங்களை இந்தத் திட்டத்தின் இணைத்துக்கொண்டவர்கள், இதை தங்களின் சொந்த வணிக லாபத்துக்காகவும், புகழுக்காகவும் பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தளத்தில் இதுகுறித்து வெளிபடுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சைபர் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் பணிகள் மற்றும் அவர்கள் செய்யும் பணிகள் குறித்த ரகசியத்தை வெளியில் சொல்லக் கூடாது. நிபந்தனைகள் மீறப்பட்டால் தன்னார்வலர்கள் மீதே நடவடிக்கை பாயும்.

'தங்களின் சுய லாபத்திற்காகவும், அரசியல் உள்நோக்கத்திற்காகவும் இதைத் தடுக்க மத்திய அரசு என்ன வழிமுறைகளை வைத்துள்ளது?

இத்தகைய அதிகாரபூர்வமற்ற கண்காணிப்பு மற்றும் குடிமக்களே இதை ஆய்வு செய்வது என்பது ஒருவரின் கருத்து சுதந்திரம், அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இது குடிமக்களுக்கு எதிராக மற்றொரு குடிமகனை உருவாக்கும் அபாயகரமான போக்கு' என பலரும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தலையங்கம் ஒன்றையும் எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com