ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நிபுணர் ஏர் மார்ஷல் மானவேந்திர சிங்கிடம் விசாரணை ஒப்படைப்பு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நிபுணர் ஏர் மார்ஷல் மானவேந்திர சிங்கிடம் விசாரணை ஒப்படைப்பு
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நிபுணர் ஏர் மார்ஷல் மானவேந்திர சிங்கிடம் விசாரணை ஒப்படைப்பு
Published on

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் நிபுணர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பலவகை ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவம்கொண்ட விமானியான இவர், ஹெலிகாப்டர்கள் குறித்த அனைத்து நுணுக்கங்களையும் நன்கறிந்தவர் என்கின்றனர் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள்.

விபத்துக்கான காரணம் என்ன? என்பதை கண்டறியவேண்டிய முக்கிய பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதே ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் எந்த அளவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என காட்டுவதாக கருதப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்குமா? அல்லது விமானி மூடுபனி காரணமாக வழி தவறினாரா போன்ற பல்வேறு அம்சங்கள் விசாரணையில் அடங்கியுள்ளன. வேறு ஏதேனும் காரணம் இருந்திருக்கலாமா என்றும், குறிப்பாக நாசவேலை நடந்திருக்குமா என்றும் அலசப்படும்.

சிறு ஆதாரங்கள்கூட முழுவதுமாக விசாரிக்கப்படும் என்கிறார்கள், விமானப்படை விசாரணைகளை நன்கறிந்த வல்லுநர்கள். பல விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, அரசுக்கு மட்டுமே தெரியப்படுத்தப்படும் என்கிறார்கள் இவர்கள். அரசு வெளியிட்டால் மட்டுமே விவரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்கிற அடிப்படையிலேயே முப்படைகள் இதுபோன்ற விசாரணைகளை கையாள்கின்றன. ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமையில் விசாரணை நடத்த பல்வேறு துறைகளில் வல்லுநர்களான பல அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என ஓய்வுப் பெற்ற விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.



தற்போது ஏர் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீப் என்கிற பொறுப்பில் விமானப்படையில் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருக்கிறார் ஏர் மார்ஷல் மானவேந்திர சிங். இதற்குமுன், விமானப்படையின் தென் பிராந்தியத்தின் தலைமைப்பொறுப்பில் இவர் சிறப்பாக செயலாற்றியதும் நினைவுகூரப்படுகிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியில் உள்ள விவரங்கள், ஏர் டிராபிக் கன்ட்ரோல் அளிக்கும் தகவல்கள், சம்பவ இடத்தில் கிடைத்துள்ள தடயங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை அமையும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

1982ஆம் வருடத்திலிருந்து ஹெலிகாப்டர் விமானியாக ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் பணிபுரிந்து வருகிறார். சியாச்சின் போன்ற கடினமான எல்லைப்பகுதிகளில் இவர் ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். ராஜஸ்தான் பாலைவனம், வடகிழக்கு வனங்கள், உத்தராகண்ட் மலைப்பகுதிகளும் இவருக்கு பரிச்சயமானவை. ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் நேஷனல் டிபென்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்றவர். காங்கோ நாட்டிலும் இவர் அமைதிப்படை பொறுப்பில் பணியாற்றியுள்ளார். இந்திய விமானப்படை பயன்படுத்தும் அனைத்து ஹெலிகாப்டர்களிலும் 6000 மணி நேரத்துக்கும் மேல் வானில் பறந்துள்ளார் இவர். விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதிலும் தேர்ந்த ஏர் மார்ஷல் மானவேந்திர சிங், ஹெலிகாப்டர்கள் பாதுகாப்புத்தன்மை குறித்த அம்சங்களிலும் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com