30 இடங்களுக்கு சீன மொழிப் பெயர்கள்.. அருணாச்சல பிரதேசத்தில் சீனா அட்டகாசம்.. பின்னணி என்ன?

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. தார்மீக ரீதியாக இந்தியாவிற்குள் இருக்கும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, புதிய சீனப்பெயர்களையும் சூட்டியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அருணாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்pt web
Published on

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. தார்மீக ரீதியாக இந்தியாவிற்குள் இருக்கும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, புதிய சீனப்பெயர்களையும் சூட்டியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Zangnan பிரதேசத்தில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதைக்கு தங்களது மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் பெயர் சூட்டியிருக்கிறது சீனா. இதில் என்ன என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கு, Zangnan என்பது இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தின் சீனப்பெயர் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத்திய பகுதி என்று சொந்தம் கொண்டாடுகிறது சீனா... அந்நாட்டின் பொதுவிவகாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 30 பெயர்களை கொண்ட பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது. வரும் மே 1 ஆம்தேதியில் இருந்து இந்த பெயர்கள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மொழியில் பெயர்கள் இருப்பது சீனாவின் பிரதேச ஆளுமைக்கும் இறையாண்மை உரிமைகளுக்கும் எதிரானது என்று சீன பொதுவிவகாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கு முன்பாக 2017 ல் அருணாச்சலப்பிரதேசத்தின் ஆறு இடங்களின் பெயர்களையும், 2021 ல் 15 இடங்களின் பெயர்களையும், 2023 ல் 11 இடங்களையும் சீன மொழியில் அந்நாடு பெயரிட்டது.

அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனா
அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனாpt web

அண்மையில் அருணாச்சலப்பிரதேசத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் Sela சுரங்கத்தை பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். Tawang என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கத்தின் மூலம், போர்ச்சூழல்களில் இந்திய துருப்புகளை வேகமாக அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சீனா தற்போது அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு சீனப்பெயர்களை வைத்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கு பகுதிகள் எல்லைப் பகுதிகள் சரிவர வரையறுக்காமல் இருந்தது. குறிப்பாக பூடானில் இருந்து மியான்மர் இடையே இருக்கும் பகுதிகள் குறித்து தெளிவான வரையறை பிரிட்டிஷ் தரப்பிலும் திபெத் தரப்பிலும் மேற்கொள்ளாமல் இருந்தது. பிரிட்டிஷ் காலத்தில் திபெத் என்பது தன்னாட்சி பெற்ற நாடாக இருந்தது. சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு பகுதியாக இருந்ததால் திபெத்திற்கும் இந்தியாவிற்கும் எல்லை கோடுகள் தேவைப்படாத காலமாக இருந்தது. அசாம் மாநிலத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போதிலிருந்து குடியேற்றங்களும் சர்வதேச சட்டங்களை மீறி ராணுவ முகாம் அமைப்பது சீன மொழி பெயர் சூட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

அருணாச்சலப்பிரதேசத்துக்கு சீனா உரிமை கோருவது அபத்தமானது, கேலிக்குரியது என்று அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார். அருணாச்சலப்பிரதேசம், இந்தியாவின் இயற்கையான அங்கம் என்று அவர் தெரிவித்தார். இதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் அங்கம் என்றாலும் இதனை சீனா ஏற்காமல் தொடர்ந்து தங்கள் நாட்டின் பகுதியாகவே குறிப்பிடுகிறது. இந்த பிரச்னையின் பின்னணி குறித்து விவரிக்கிறார் செய்தியாளர் கணபதி சுப்பிரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com