பிரத்யேக சரக்கு போக்குவரத்து ரயில்களுக்கான சிக்னல், தொலைதொடர்பு வசதிகளை அமைக்க சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.471 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது இந்திய ரயில்வே.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் இருந்து முகல்சராய் ரயில் நிலையம் வரை 417 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்திற்கான சிக்னல் மற்றும் தொலைதொடர்பு வசதிகளை அமைப்பதற்காக இந்திய ரயில்வே கடந்த 2016-ஆம் ஆண்டு, சீனாவின் பீஜிங் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தது.
ரூ.471 கோடிக்கான இப்பணி சீன நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சீன நிறுவனம் முடிக்காததால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் சீன நிறுவனம் வெறும் 20 சதவீத பணியை மட்டுமே செய்துள்ளதாக இந்திய ரயில்வே சரக்குப் போக்குவரத்து கழகத்தின் இயக்குநர் அனுராக் சாச்சன் தெரிவித்துள்ளார்.