சீன ராணுவத்தால் அருணாச்சல பிரதேச எல்லையிலிருந்து சென்ற வாரம் அழைத்துச்செல்லப்பட்ட 17 வயது இளைஞர் மிரம் தரோன் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். சீன ராணுவ அதிகாரிகள் அவரை இந்திய ராணுவத்திடம் இன்று ஒப்படைத்தனர். மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு, மிரம் தரோன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தகவல் அளித்துள்ளார். சீன ராணுவம் அவரை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்த விவரத்தை ரிஜூஜூ சுட்டுரை மூலம் உறுதிசெய்திருக்கிறார்.
முன்னதாக மிரம் தரோன் சீனா ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளார் என புகார் வந்ததை தொடர்ந்து, இந்திய ராணுவத்துக்கு அதுகுறித்து ஆலோசிக்க தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திய ராணுவ அதிகாரிகள் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய இளைஞர் மிரம் தரோன் மயமான விவரங்களை அளித்து, அவரை கண்டுபிடித்து தரும்படி தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து சீன ராணுவ அதிகாரிகள் 17 வயது இளைஞர் தங்கள் வசம் உள்ளதாக சென்ற வாரம் தெரிவித்தது. மேலும் அவரை ஒரு வாரத்தில் விடுவிப்பதாக உறுதியும் அளித்தனர் சீன அதிகாரிகள்.
பல்வேறு வடகிழக்கு மாநிலங்களை போலவே, வனப்பகுதிகளில் வேட்டையாடுவது மற்றும் மூலிகைகளை சேகரிப்பது ஆகியவை எல்லைப் பகுதிகளில் உள்ள அருணாச்சலப்பிரதேச இளைஞர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அப்படி சமீபத்தில் மிரம் தரோன் மற்றும் ஜானி யாயிங் என்கிற இன்னொரு இளைஞர் வனப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது அவர்களை, சீன ராணுவம் கடத்தியதாக அந்தப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் டாபிற் காவ் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது ஜானி யாயிங் அங்கிருந்து தப்பியதாகவும், பின்னர் அவர் அதிகாரிகளுக்கு சீன ராணுவத்தின் அந்நடவடிக்கை குறித்து தகவல் அளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் காவ் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகளும் சீன அரசை தொடர்பு கொண்டு அருணாச்சல பிரதேச இளைஞரை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். அதேநேரத்தில்தான், இந்திய ராணுவ அதிகாரிகள் எல்லைப்பகுதியில் உள்ள சீன ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டார்கள். அப்போதுதான் இளைஞர் தங்கள் வசம் உள்ளார் என சீன ராணுவம் ஒப்புக்கொண்டது. பிறகு, மிரம் தரோன் முறைப்படி இந்திய இராணுவத்திடம் எல்லையில் ஒப்படைக்கப்படுவார் என்றும் இதற்கான வழிமுறைகளை செய்து முடிக்க ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் வரை ஆகலாம் எனவும் சீன ராணுவத்தினர் தெரிவித்தனர். சீன ராணுவம் ஏற்கெனவே இப்படிப்பட்ட ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக காவ் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிவந்த நிலையில், தற்போது இளைஞர் மிரம் தரோன், சீன ராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
- கணபதி சுப்ரமணியம்.