ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ”இந்திய எல்லையின் மேற்குப் பகுதி எப்போதும் சீனாவுக்கே சொந்தமானது என்ற உண்மையை மாற்றாது” என அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்திய அரசிலியமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ஜம்மு -காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்தது. அந்தச் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ஆம் ஆண்டு ரத்துசெய்த மத்திய அரசு, ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடைபெற்ற நிலையில், கடந்த டிச. 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சட்டப்பிரிவு 370 நீக்கியது செல்லும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு, அடுத்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் நாடு முழுவதும் கருத்துகள் பதிவுசெய்யப்பட்டு வரும் நிலையில், சீனா பதிலடி கொடுத்திருப்பதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ’இந்திய நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு’ லடாக் தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், ”லடாக்கின் ஒரு பகுதி சீனாவுடையது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இந்தியா அதை ஒருதலைபட்சமாகவும் சட்டவிரோதமாகவும் உருவாக்கியது. சீனா, இந்திய எல்லையின் மேற்குப் பகுதி உரிமைகோரலில் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்து, ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்க இந்தியா முடிவு செய்த நேரத்தில், சீனாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் இந்த நடவடிக்கையின் மூலம், ‘இந்தியா ஒருதலைபட்சமாகத் தனது சட்டங்களைத் திருத்தியுள்ளது’ என்று அப்போது குற்றஞ்சாட்டி இருந்தது.