புதுச்சேரியின் விடுதலை நாள் விழாவையொட்டி, அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசியக் கொடி ஏற்றியுள்ளார்.
விடுதலை நாள் கொண்டாட்டத்தில் நடந்த காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் முதல்வர் ரங்கசாமி ஏற்றுள்ளார். பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விடுதலையானது. விடுதலை நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கடற்கரை சாலை, பாரதி பூங்கா ஆகியவை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பாரதியார் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் சிலைகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
விடுதலை நாள் கொடியேற்றத்துக்குப்பின் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரி மாநிலத்தில் 70 விழுக்காடு மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எந்தவித அச்சமோ, தயக்கமோ இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரியில், போதுமானளவு தடுப்பூசிகள் இருப்பதால், மக்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாட்டில் உள்ள சிறிய மாநிலங்களின் வளர்ச்சியில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. எனது தலைமைதலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் பல்வேறு திட்டப்பணிகள் வெகு சிறப்பாக செய்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா ரூ.500 வீதம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். போலவே வேளாண் தொழிலில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையை இயந்திரமயமாக்கல் மூலம் ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது அரசு துறைகளில் காலியாக உள்ள பத்தாயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். புதுச்சேரியில் கனமழையினால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அதுவும் சரிசெய்யப்படும். வரும் 8ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை திறந்து பொது விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் விதத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்” என்றார்.