போபால் நகரில் சைரனுடன் வந்த கார் ஒன்றினை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். காரில் இருந்து இறங்கியவர்களிடம் டிராபிக் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், காரில் வந்தவர் தான் முதலமைச்சரின் மைத்துனர் என்று கூறி போலீசாரை மிரட்டியுள்ளார். அந்த காரில் மேலும் இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் தன்னுடைய செல்போனை எடுத்து அதில் ஒரு நம்பரை டயல் செய்கிறார். அது முதலமைச்சரின் எண் என்று போலீசாரிடம் கூறுகிறார். இந்த விஷயம் முழுவதும் கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
போலீசாருடன் பிரச்னை செய்த அந்த மூன்று பேரும் யார் என்பது இன்னும் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் வந்த எஸ்.யு.வி வகை சொகுசு கார் ராஜேந்திர சிங் சவுகான் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பதவியில் இருப்பவர்கள் மட்டுமே சைரனை பயன்படுத்த முடியும். அதனால், காரில் வந்தவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்திய பிரதேசம் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “எனக்கு கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள். ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும்” என்று கூறினார்.