’குண்டுவைப்பவர்கள் தமிழர்களா..’ மத்திய இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு - தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்!

தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
ஷோபா கரண்ட்லஜே, மு.க.ஸ்டாலின்
ஷோபா கரண்ட்லஜே, மு.க.ஸ்டாலின்ட்விட்டர்
Published on

மத்திய இணையமைச்சரின் சர்ச்சை பேச்சு!

தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "கர்நாடகாவில் இந்துகளை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு செயல்கள் அரங்கேறுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துகின்றனர். கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என சிலர் கோஷமிடுகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்கள், பெண்கள் மீது ஆசிட் வீசுகின்றனர். கடையில் அமர்ந்திருப்பவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இங்கு என்ன ஆட்சி நடக்கிறது?" எனத் தெரிவித்து இருந்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான ஷோபா கரண்ட்லஜே, இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களிடம் வெறுப்பை பரப்பிவிட்டு, பிரிவினைக்கு வித்திடுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அமைச்சரின் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இதற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று, தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவின் பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் ஏற்கமாட்டார்கள். 'பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒருவர் என்ஐஏ அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்பில் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும். பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் நிச்சயம் நிராகரிப்பார்கள். அமைதி, நல்லிணக்கம், தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் ஷோபா மீது சட்டப்படி நடவடிக்கை தேவை. பிரதமர் முதல் தொண்டர்கள் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இதுபோன்ற பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில்கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் என்னதான் நடக்கிறது!! தொடரும் இந்தியர்களின் மரணங்கள்.. இதுவரை இறந்தவர்கள் யார் யார்?

ஷோபா கரண்ட்லஜே, மு.க.ஸ்டாலின்
"பிரதமர் மௌனகுருவா? விஸ்வகுருவா?" - குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

சர்ச்சை பேச்சுக்குக் காரணம் என்ன? 

கர்நாடகாவின் சித்தண்ணகல்லி பகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் கடை வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 17ஆம் தேதி அந்தக் கடைக்காரர் மசூதி தொழுகையின்போது அனுமன் பாடல்களைச் சத்தமாக ஒலிக்கவிட்டதாகவும், இதை அங்கு வந்த சில இளைஞர்கள் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் கடைக்காரரை, இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நடவடிக்கைக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்தச் சம்பவம் இந்து - முஸ்லிம் சம்பந்தப்பட்டதாக அங்குள்ள கட்சிகளால் திசை திருப்பப்பட்டது. இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாநில பாஜக போராட்டத்திலும் ஈடுபட்டது. இதில், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே , பாஜக எம்எல்ஏ எஸ்.சுரேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவர்கள் போராட்டத்தின்போது திடீரென பேரணி நடத்த முயன்றனர். ஆனால், போலீசார் இதற்கு அனுமதி மறுத்து அனைவரையும் கைது செய்தனர்.

இதையும் படிக்க: “வழக்கு விசாரிக்கும் போதே கொண்டுவந்தது ஏன்” - CAA-க்கு எதிராக 236 மனுக்கள் - சூடிபிடித்த விசாரணை!

ஷோபா கரண்ட்லஜே, மு.க.ஸ்டாலின்
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சர்ச்சை கருத்து பதிவு: எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை! ஆனால்..?

வெறுப்புப் பேச்சை விதைக்கும் பாஜக வேட்பாளர்கள்?

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், மதரீதியான வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக அவர்களை கைதுசெய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே ஆகிய இருவருக்கும் இந்தத் தேர்தலிலும் அக்கட்சி சீட் வழங்கியிருக்கிறது. இவ்விருவருமே பெங்களூருவில் முறையே, தெற்கு மற்றும் வடக்கு லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்தப் போராட்டத்தின் போதுதான் ஷோபா கரண்ட்லஜே இப்படிப் பேசியிருந்தார். இதனிடையே, தேஜஸ்வி சூர்யா மீது மத கலவரத்தை தூண்டிய பிரிவின்கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி அணுகியுள்ளது.

தனியார் உணவகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம்!

முன்னதாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு வைட் பீல்ட் அருகில் உள்ள, குந்தலஹாலி பகுதியில் இயங்கிவரும் பிரபல ’ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் உணவகத்தில் பணிபுரிந்த 3 பேர், சாப்பிட வந்த பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பெங்களூரு குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் மர்ம நபர் பற்றிய புகைப்படத்தை என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது. மேலும் அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கும் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாகத்தான் ஷோபா கரண்ட்லஜே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அன்று இந்திரா காந்தி.. இன்று மோடி.. தேர்தல் நடத்தை விதியை மீறியதாகக் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?

ஷோபா கரண்ட்லஜே, மு.க.ஸ்டாலின்
பெங்களூரு குண்டுவெடிப்பு: சிறையில் இருந்த 4 பேரிடம் தீவிர விசாரணை.. களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ.!

”தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிப்பதா..?” - இபிஎஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் ஷோபாவின் பேச்சுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தன்னுடைய கண்டன பதிவில், “தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் @ShobhaBJP அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

”தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கணும்” - கனிமொழி

திமுக எம்பி கனிமொழியும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்த வெறுப்பு பேச்சு மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

திமுக இளைஞரணி தலைவரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பேச்சு தமிழக மக்களின் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில், 'ராமேஸ்வரம் கேஃப் குண்டுவெடிப்பு தொடர்பாக கிருஷ்ணகிரி காடுகளில் பயிற்சி பெற்றவர்களை குறிப்பதற்காவே அதனை சொல்லி இருந்தேன். என்னுடைய கருத்துக்களை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com