நீதிபதியிடம் ‘டோஸ்’ வாங்கிய கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர்!
உச்சநீதிமன்ற நீதிபதியிடம் வாயைகொடுத்து, கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் திட்டு வாங்கினார்.
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து கார்த்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, தான் ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தபோது இவ்வழக்கை விசாரித்துள்ளதால், வழக்கில் இருந்து விலகுவாதாக தெரிவித்தார். இதனால் வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அதன்படி வழக்கு இன்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘கடைசியாக இந்த வழக்கை நீங்க விசாரிக்கிறீங்களே, ரொம்ப சந்தோஷம்” என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி, “என்னது சந்தோஷமா” நீதிமன்றத்துக்கு என ஒரு ஒழுங்கு இருக்கிறது, அது கூட தெரியாதா என சாடினார். நீதிமன்றம் என்பது அரசியல் சாசன கடமைகளை ஆற்றுவதற்காக அமைக்கப்பட்டது. அதன் மாண்பை கெடுக்க வேண்டாம் என்றும் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞரை திட்டி அனுப்பினார்.