“ஓய்வு பெற குறுகிய காலம்தான் உள்ளது என்றாலும், நான் இப்போதும் பதவியில்தான் இருக்கிறேன். இந்த வேடிக்கையான தந்திரங்களை மீண்டும் முயற்சி செய்து பார்க்காதீர்கள்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்றத்திலேயே கண்டித்திருப்பது இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாகத்தான் நீதிமன்றத்தில் எந்த மாதிரியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என அவர் பாடம் எடுத்தது வைரலானது. இந்தநிலையில், தற்போது இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமல்ல, பலமுறை சந்திரசூட் நீதிமன்றத்தில் தெரிவித்த கண்டிப்பான கருத்துக்கள் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியிருக்கிறது. அவை குறித்துப் பார்ப்போம்...
உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக, 2022, நவம்பர் 9-ம் தேதி பதவியேற்றார் டி.ஒய்.சந்திரசூட் எனப்படும் தனஞ்ஜெய யஷ்வந்த் சந்திரசூட். இவரின் தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீண்டகாலம் பணியாற்றியவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டத்தையும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களையும் பெற்றவர் சந்திரசூட். மார்ச் 2000 முதல் அக்டோபர் 2013 வரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர். 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாக இரண்டாண்டுகள் பணியாற்றியுள்ள அவர், வரும் நவம்பர் பத்தாம் தேதியோடு ஓய்வு பெற இருக்கிறார். அயோத்தி வழக்கு, சபரிமலைக்கு பெண்கள் சென்று வழிபடுவது குறித்த வழக்கு என பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் அங்கம் வகித்தவர். தவிர, இவரின் கண்டிப்புகளுக்கும் தனித்த கவனம் உண்டு.
அப்படித்தான் மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவருமான விகாஸ் சிங், உச்ச நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, வழக்கறிஞர்களுக்கான அறைத் தொகுதிக்கு பயன்படுத்தக் கோரி, தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தாமதமாவது குறித்து, சந்திரசூட்டிடம் விவாதம் செய்தார். “அமைதியாக இருங்கள். இப்போதே இந்த நீதிமன்றத்தைவிட்டு வெளியேறுங்கள். உங்களால் எங்களை ஏமாற்ற முடியாது. அதுமட்டுமல்லாமல், இப்படியெல்லாம் நிலத்தைக் கேட்க முடியாது” என்றார்.
தொடர்ந்து, அது விவாதமாக மாற, “தயவுசெய்து குரலை உயர்த்தாதீர்கள். பார் கவுன்சில் தலைவராக இவ்வாறு நடந்துகொள்வது முறையல்ல. உச்ச நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, பார் கவுன்சிலுக்குக் கேட்கிறீர்கள் நீங்கள். நான் முடிவுசெய்துவிட்டேன். இந்த வழக்கு மார்ச் 17-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், அது முதலில் வராது” என்றார். பின்னர் இந்தச் சம்பவத்துக்கு, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.கே.கவுல் ஆகியோர், வழக்கறிஞர்கள் சார்பாக தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் மன்னிப்புக் கேட்டனர்.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சட்டமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்துகிறார் என அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, சபாநாயகர் அழைத்த அமர்வை செல்லாது என்று நீங்கள் (ஆளுநர்) கூறுகிறீர்கள். இதைச் சொல்வதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் போக்கை திசைதிருப்ப வேண்டாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் இவை. அப்படியிருக்க ஓர் ஆளுநர் எப்படி அவ்வாறு சொல்ல முடியும். நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இது மிகவும் தீவிரமான விஷயம். அமர்வு செல்லாது என்பதால், நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று எப்படிக் கூற முடியும்... நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் தீவிரத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா...” என்று கடுமையாகக் கண்டித்தார்.
அமைச்சர் பொன்மொடி மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி, தாமதம் செய்த வழக்கிலும், “அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தை மீறுகிறார். அவருக்கு அறிவுரை கூறியவர்கள் யாரும் அவருக்கு சரியாக அறிவுரை கூறவில்லை. உச்ச நீதிமன்றம் ஒரு தண்டனையை நிறுத்திவைப்பதாகக் கூறினால், தண்டனை நிறுத்திவைக்கப்படுவது தான் என்பதை ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு நபர் மீது எனக்கு வேறுபட்ட கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால், நாம் அரசியலமைப்பின்படியே செல்ல வேண்டும்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 2024-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரித்துக் கொண்டிருந்தார். மனுதாரர்களில் ஒருவர் சார்பில் வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜராகி வாதிடும்போது, மற்றொரு மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா குறுக்கிட்டார். இதற்கு தலைமை நீதிபதி, ஹூடா தனது வாதத்தை முடித்தவுடன் பேசும்படி கூறினார்.
இதற்கு நெடும்பரா, “இங்கு இருப்பவர்களில் நான்தான் மிக மூத்த வழக்கறிஞர். அவருக்கு என்னால் பதில் கூறமுடியும். நான் நீதிமன்றத்தின் நண்பன்” என்றார். உடனே தலைமை நீதிபதி, “அப்படி யாரையும் நான் நியமிக்கவில்லை” என்றார். இதற்கு நெடும்பரா, “என்னை அவமதித்தால் நான் இங்கிருந்து வெளியேறிவிடுவேன்” என்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தலைமை நீதிபதி, “உங்களை எச்சரிக்கிறேன். இங்கு நான்தான் தலைமை வகிக்கிறேன். காவலர்களே! இவரை இங்கிருந்து அகற்றுங்கள்” என்றார். இதற்கு நெடும்பரா, “நானே இங்கிருந்து செல்கிறேன்” என்றார். உடனே தலைமை நீதிபதி, “அதை சொல்லத் தேவையில்லை. நீங்கள் இங்கிருந்து செல்லலாம். கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை பார்க்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது” எனக் கடுமையாகக் கருத்துத் தெரிவித்தார். இதே வழக்கறிஞர் நெடும்பராவை, தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கிலும் நீதிபதி சந்திரசூட் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, கடந்த வாரம் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின்போது சந்திரசூட் தெரிவித்த கருத்துக்களுக்கு வழக்கறிஞர் ஒருவர், “யா யா.. அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இதைத்தான் கூறினார். மறு சீரய்வு மனுவை தாக்கல் செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது...” என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே.. குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “இது ஒன்றும் காஃபி ஷாப் இல்லை. இது என்ன யா யா.. இந்தவார்த்தையே எனக்கு பிடிக்காது. இங்கே இதை அனுமதிக்க முடியாது” எனக் கண்டித்தார்.
நேற்று, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை பதிவாளரிடம் சரிபார்த்துக்கொண்டேன் எனக் கூறினார். அதைக் கேட்ட சந்திரசூட் “உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் நான் நீதிமன்றத்தில் பிறபித்த உத்தரவை பதிவாளரிடம் சரிபார்த்து இருப்பீர்கள்.. நாளைக்கு, நீங்கள் எனது வீட்டிற்கு வந்து எனது தனிப்பட்ட செயலாளரிடம் நான் என்ன செய்கிறேன் என்று கேட்பீர்களா?” எனக் காட்டமாக கேட்டார்.
மேலும், “ஓய்வு பெற குறுகிய காலம்தான் உள்ளது என்றாலும், நான் இப்போதும் பதவியில்தான் இருக்கிறேன். இந்த வேடிக்கையான தந்திரங்களை மீண்டும் முயற்சி செய்து பார்க்காதீர்கள்” எனக் கண்டிப்பான வார்த்தைகளை வெளிப்படுத்தினார். இதேபோன்ற பல்வேறு வழக்குகளில், சந்திரசூட்டின் கண்டிப்புகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும், அவரின் வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது. இவை எல்லாவற்றையும்விட சர்ச்சையானது மட்டுமில்லாமல் விமர்சிக்கப்பட்டது. சந்திரசூட்டின் ஓய்வுக்குப்பிறகு, சஞ்சீவ் கண்ணா 51-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.