'இனி வாரத்துக்கு ஒருநாள் சிக்கன்'-பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த அறிவிப்பு

'இனி வாரத்துக்கு ஒருநாள் சிக்கன்'-பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த அறிவிப்பு

'இனி வாரத்துக்கு ஒருநாள் சிக்கன்'-பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த அறிவிப்பு
Published on

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவுடன் கோழி இறைச்சி வழங்கப்பட இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் கோழி இறைச்சி, மற்றும் பருவகால பழங்கள் வழங்க அரசு முடிவெடுத்து அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போது மதிய உணவுடன் தானிய வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகளுடன் சிக்கன் மற்றும் பருவகாலப் பழங்கள் அடுத்த நான்கு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் ஊட்டச்சத்துகள் மாணவர்களுக்கு போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக அவ்வரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்த கூடுதல் ஊட்டச்சத்து வழங்கப்படுவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் வாரத்துக்கு ரூ.20 செலவாகும். இந்த கூடுதல் ஊட்டச்சத்து வழங்கப்படுவது அடுத்த 16 வாரங்களுக்குத் தொடரும். இதன்மூலம், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1.6 கோடி மாணவ-மாணவிகள் பயனடைவர்.

இந்த திட்டத்துக்கான செலவினை மத்திய-மாநில அரசுகள் 40:60 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும். இந்த திட்டத்துக்குக் கூடுதலாக ரூ.371 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அம்மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை மனதில் வைத்தே மேற்கு வங்க அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக பாஜக அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. அதற்கு திரிணாமுல் அரசும் பதிலடி கொடுத்துள்ளது.

 - ஜெ.பிரகாஷ்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com