மாவோயிஸ்ட்டுகள் சண்டையில் நான்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்திலுள்ள மஹலா கிராமத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு மாவோயிஸ்ட்டுகளுக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே துப்பாக்கச் சூடு நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் 114 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அத்துடன் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை டிஐஜி சுந்தரராஜ், “இன்று மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி சத்தீஸ்கரின் டாண்டேவாடா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் நடைபெற்ற 20 நாட்களுக்குள் மற்றொரு தாக்குதலை மாவோயிஸ்ட்டுகள் தற்போது அரங்கேற்றியுள்ளனர்.இந்தத் தாக்குதல் நடைபெற்ற கான்கர் தொகுதிக்கு வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.