சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் 86 வயதான தந்தை நந்த்குமார் பாகல் பிராமணர்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிராமணர்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துக்களுக்காக கைது செய்யப்பட்ட நந்த்குமார், ராய்ப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக, பிராமணர்களை வெளிநாட்டினர் என்று கூறி புறக்கணிக்குமாறு முதல்வரின் தந்தை சமீபத்தில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், மேலும் பிராமணர்களை கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள் என்றும் அவர் சொன்னதாக 'சர்வ் பிராமண சமாஜ்' என்ற அமைப்பு புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து, டிடி நகர் போலீஸார் சனிக்கிழமை இரவு நந்த்குமார் பாகேல் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். நந்த்குமார் பாகேல் முன்பு ராமருக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். சமூக ஊடக தளங்களில் முதலமைச்சரின் தந்தை கூறிய கருத்துகளின் வீடியோ கிடைப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த பிரச்னைக்கு பதிலளித்த முதல்வர் பூபேஷ் பாகேல், "சட்டம் மிக உயர்ந்தது. நமது அரசாங்கம் அனைவரையும் ஆதரிக்கிறது. மாநிலத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட யாரும் இல்லை. அந்த நபர் எனது தந்தையாக இருந்தாலும். சத்தீஸ்கர் அரசாங்கம் ஒவ்வொரு மதத்தையும், சமூகத்தையும் மற்றும் அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான எனது தந்தை நந்த் குமார் பாகேலின் கருத்து வகுப்புவாத அமைதியை சீர்குலைத்திருக்கிறது. அவருடைய கருத்தால் நானும் வருத்தப்படுகிறேன்" என்று முதல்வர் கூறினார்.