தேர்வின்போது அதிகாரிகள் ஆடைகளை கழைத்து சோதனை செய்ததால், அவமானத்தால் பத்தாம் வகுப்பு பழங்குடியின மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் உள்ள பள்ளியில் பழங்குடியின மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது. தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேர்வு அறைக்கு வந்த அதிரடிப் படையினர் சிறுமி பிட் வைத்திருந்ததாகக் கூறி, அவரைச் சோதனை செய்துள்ளனர். இதில் மாணவியின் ஆடைகளை கழைத்து சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிட் இல்லாததால் தேர்வை மீண்டும் எழுதுமாறு மாணவிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வீட்டுக்குச் சென்ற மாணவி இரண்டு நாட்களுக்கு பிறகு காணாமல் போனார். பின்னர், அடுத்த நாள் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார்.
தேர்வு அறையில் நடந்ததை மாணவிகள் அப்பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனிடையே பெற்றோரிடம் ''எனக்கு செத்துப் போய்விடலாம் போல இருக்கிறது'' என்று மாணவி தொடர்ச்சியாகக் கூறியுள்ளார். ஆனால் தேர்வை ஒழுங்காக எழுததால் சிறுமி அவ்வாறு கூறுவதாக பெற்றோர் நினைத்து மற்ற தேர்வுகளை ஒழுங்காக எழுதுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அவமானம் காரணமாக அச்சிறுமி மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துப் பேசிய மாவட்ட வருவாய் அதிகாரி ரவி மிட்டல், ''இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. மாணவர்கள் இதுகுறித்துக் கவலைப்பட வேண்டாம்'' என தெரிவித்தார்.