ஸ்டேட் வங்கியுடன் இணைந்த துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது புதிய செக் புக்கிற்கு விண்ணப்பிக்க மார்ச் 31 ஆம் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பேங்க் ஆப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கிகளும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி இணைக்கப்பட்டன. அதேபோல், 2013-ம்ஆண்டு தொடங்கப்பட்ட பாரதீய மகிளா வங்கியும் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது. தொடங்கி 3 ஆண்டுகள் 3 மாதங்களிலே பாரதீய மகிளா வங்கி இணைக்கப்பட்டது.
இதனையடுத்து, இணைக்கப்பட்ட 5 துணை வங்கிகள் மற்றும் பாரதீய மகிளா வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியில் புதிய செக் புக்கினை விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளுமாறு ஸ்டேங் வங்கி வலியுறுத்தியது. இதற்காக முதலில் 2017, செப்டம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது 2017, டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டேங் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்கள் புதிய செக் புக்கிற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-க்குள் புதிய செக் புக்கிற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், பழைய செக் புக் அனைத்தும் செல்லாது என்று ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. ஸ்டேட் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் அல்லது ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகளில் விண்ணப்பிக்கலாம். உடனடியாக விண்ணப்பித்து சிரமங்களை தவிர்க்கவும் என்று ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியுள்ளது.