அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக, சந்திராயன்-II உலக அளவில் மைல் கல்லாக அமையும் என இஸ்ரோ விஞ்ஞானியும் சந்திராயன் 1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திராயன்-I விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் தரைப்பகுதியிலிருந்து 100கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திராயன்-I விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திராயன்-II விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. அதன்படி வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்குள் சந்திராயன்-II விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சந்திராயன்-II குறித்து விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன் ஒன்று நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்ததாக கூறினார். சந்திராயன் 2 விண்கலத்தின் ஆறு சக்கர கலனால், நிலவில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து கள ஆய்வு செய்ய முடியும் என கூறிய அவர், நிலவிற்கு மனிதனை அனுப்பவதற்கான முதற்கட்ட ஆயத்த பணியின் முன்னோட்டமே சந்திராயன்-II திட்டம் என்றும் தெரிவித்தார்.
சந்திராயன்-II விண்கலத்தில் 3 முக்கிய தொழில்நுட்பங்கள் அனுப்பப்படவுள்ளன. அவை ஆர்பிடர்(Orbiter), லண்டர்(Lander), ரோவர்(Rover). ஆர்பிடர் மற்றும் லண்டர் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-IIIயின் மூலம் ஏவப்படும். லண்டரினுள் ரோவர் பொருத்தப்படவுள்ளது.
சந்திராயன்-II பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். அதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது.