மக்களவை தேர்தலுக்கு 3வது அணி அமைக்க தீவிர முயற்சி செய்து வரும் சந்திரசேகர் ராவ் இன்று மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க தேசிய அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. 3வது அணி அமைக்கும் முயற்சியில் உள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் சந்திரசேகர் ராவ் முகாம் இட்டுள்ளார். முன்னதாக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர் ராவ் பேசியுள்ளார்.
சந்திரசேகர் ராவின் இம்முயற்சியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆளும் கட்சியை வீழ்த்த நினைப்பவர்கள் முக்கிய எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இல்லாமல், 3வது அணிக்கு முயற்சி செய்வதன் நோக்கம் வேறு யாருக்கோ உதவுவதுதான் என காங்கிரஸ் கூறியுள்ளது. இதற்கிடையில் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையில் கூட்டணி ஏறக்குறைய உறுதியாகி தொகுதி பங்கீடும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இக்கூட்டணி, மக்களவை தேர்தலில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. இதற்கிடையில் தேசிய அளவில் 3வது அணி அமைத்து அதன் பிரதமர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க மாயாவதி முயற்சித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இதன் ஒரு பகுதியாக சரத் பவார், தேவகவுடா, அஜித் ஜோகி, அபய் சிங் சவுதாலா, ஹேமந்த் சோரன் போன்ற கட்சிகளின் தலைவர்களுடன் மாயாவதி பேசியுள்ளதாகவும் தெரிகிறது. இந்தச் சூழலில் மாயாவதி, அகிலேஷ் ஆகியோரை சந்திரசேகர் ராவ் சந்திக்க இருப்பது பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.