நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட, உச்ச நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்ததையடுத்து, சண்டிகரில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளுக்கு, முக்கிய மாநில சாலைகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தச் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது தவிர்க்கப்படும் என தெரியவந்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையின் படி, சண்டிகர் நகரத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளாக அறிவிக்கப்பட்டன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுபானக் கடைகளை மூட வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, இந்தச் சாலைகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளை சண்டிகர் யூனியன் பிரதேச அரசு மூட வேண்டும். அப்படி மூடுவதைத் தவிர்க்க, சண்டிகர் யூனியன் பிரதேச அரசு, சாலைகள் வகைப்படுத்தப்பட்டதை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் பரித்துரைப்படி மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் மாவட்ட முக்கிய சாலைகள் என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.
சமூகநல ஆர்வலர் ஹர்மன் சித்து சண்டிகரின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.