முறைகேடாக கடன் வழங்கியது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குநர் சந்தா கோச்சர், வீடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத் ஆகியோர் அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்த சந்தா கோச்சர், தனது கணவர் தீபக் வேலை செய்த வீடியோகான் நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி மூவாயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக புகார் எழுந்தது. இதற்கு பிரதிபலனாக தீபக்கின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சந்தா கோச்சார், தீபக், வீடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தன.
மேலும், இந்த முறைகேடு தொடர்பாக மும்பையில் உள்ள சந்தா கோச்சர், அவுரங்கபாத்தில் உள்ள வேணுகோபால் தூத் ஆகியோர் இல்லத்தில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
இந்நிலையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் ஆகியோர் காலையில் விசாரணைக்கு ஆஜராகினர். பிற்பகலில் வேணுகோபால் தூத்தும் விசாரணைக்கு ஆஜரானார். அவர்களிடம் அமலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.