மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ராஜ்நாத் சிங். மீண்டும் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அவர், ஆயுதப் படைகளுக்கான அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள படைகளுக்கான சீர்திருத்த நடைமுறைகள் தொடர்பான சவால்களை எதிர்கொண்டுள்ளார்.
மோடியின் முதல் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், இரண்டாவது ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றார். அப்போது, ஆயுதப் படைகளுக்கு குறுகிய கால பணியாளர்களை சேர்ப்பதற்காக ஜூன் 2022இல் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று தேர்தல் பரப்புரைகளிலும் எதிர்க்கட்சிகள் கூறின. இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உயிர்கொடுக்கும் நிதிஷ்குமார், அக்னிபாத் திட்டம் வேண்டாம் என்று வலியுறுத்தும் நிலையில் ராஜ்நாத் சிங்கிற்கு இது முதன்மை சவாலாக உருவெடுத்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய எஸ்.ஜெய்சங்கர், இரண்டாவது முறையாக வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான அவருக்கு, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளின் தூதராக பணிபுரிந்த அனுபவம் அமைச்சரானபோது கைகொடுத்தது.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஜெய்சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவை இணைக்கும் இரண்டு பொருளாதார வழித்தடங்களை உறுதி செய்வது முக்கியப் பணியாக இருக்கும்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக 2004 முதல் 2007 வரை ஜெய்சங்கர் பணியாற்றினார். அப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 2009-ல் உடன்படிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை குழுவுக்கும் தலைமைத் தாங்கினார். 2009 முதல் 2013 வரை சீனாவுக்கான இந்தியத் தூதராக ஜெய்சங்கர் இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் பல முக்கிய முன்னேற்றங்களை கண்டது.
அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றிய காலத்தில் 2014 செப்டம்பரில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடியின் வருகையையும், நியூயார்க்கில் ஹவுடி மோடி நிகழ்ச்சியையும் திட்டமிட்டு செயல்படுத்தி பாராட்டு பெற்றார்.
2015 ஜனவரி முதல் 2018 ஜனவரி வரை வெளியுறவுச் செயலராக இருந்த ஜெய்சங்கர், மோடியின் முதல் ஆட்சியில் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுடன் இந்தியாவின் உறவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவை மேற்கத்திய ஊடகங்கள் விமர்சித்த நேரத்தில், ஜெய்சங்கர் அளித்த நெருப்பு போன்ற பதில்கள் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஜெய்சங்கரின் திறன்களை வெளிப்படுத்தும் மீம்ஸ்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.