ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகள் ரத்து செய்யப்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜூலை ஒன்றாம் தேதி நிலவரப்படி ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்ப எண்ணை இணைத்து வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகள் தள்ளுபடி செய்யப்படாது என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்கும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஆதார் எண் வைத்திருப்பவர்கள் பான் கார்டுடன் அதை இணைப்பதில் எந்தவித பிரச்னையும் இல்லை. அதேநேரம், ஆதார் கார்டுகள் இல்லாதவர்கள் மற்றும் புதிதாக் ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்திருப்பவர்களுக்கு இந்த விதிமுறையை கட்டாயமாக்கக் கூடாது என்றும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.