தற்போதைய கொரோனா தொற்றுநோய் சூழலில் மாநில அரசாங்கங்களே கோவிட் 19 தடுப்பூசிகளை வாங்கவேண்டும் என கட்டாயப்படுத்துவது நாட்டின் கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
அனைத்து வயதினருக்கும், அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு மாநிலங்களுக்கு, மத்திய அரசு இலவச தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், "மற்ற மாநிலங்களைப் போலவே ஜார்க்கண்ட் மாநிலமும் பல்ஸ் போலியோ உள்ளிட்ட அனைத்து நோய்த்தடுப்பு திட்டங்களுக்கும் மத்திய அரசிடமிருந்தே இலவசமாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களே சொந்தமாக வாங்கவேண்டும் என கட்டாயாப்படுத்தப்படுவது சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவே முதல் தடவை. முழு தேசமும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா நெருக்கடியில் போராடி வரும் சவாலான சூழ்நிலையில், மத்திய அரசு கூட்டாட்சி கொள்கைக்கு எதிராக நிற்கிறது"என்று தெரிவித்திருக்கிறார்.
தடுப்பூசி முன்னுரிமைகளை வரையறுப்பதற்கான சுதந்திரத்தை மாநிலங்களுக்கே மத்திய அரசு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ஹேமந்த் சோரன், இதுவே முழுமையான தடுப்பூசி இலக்கை சரியான நேரத்தில் அடைய உதவும் என்றும், இதுவே மூன்றாவது அலையை திறம்பட சமாளிப்பதற்கான வழி. இதுபோன்ற கடினமான காலங்களில் உங்கள் ஆதரவு தேவை என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.