விவசாயிகளின் வருமானத்தைக் கணக்கிட புதிய வழிமுறை? - மத்திய அரசு திட்டம்

விவசாயிகளின் வருமானத்தைக் கணக்கிட புதிய வழிமுறை? - மத்திய அரசு திட்டம்
விவசாயிகளின் வருமானத்தைக் கணக்கிட புதிய வழிமுறை? - மத்திய அரசு திட்டம்
Published on

விவசாயிகளின் வருமானத்தைக் கணக்கிட மத்திய அரசு புதிய வழியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது முதல் ஆட்சிக் காலத்தில் 2022-23ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு செய்யப்படும் என்று அறிவித்தது. இது தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசின் முக்கிய நோக்கம் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்யவதே ஆகும் எனத் தெரிவித்தார். இதற்கு வழி வகுக்கும் வகையில் இந்தாண்டு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வருமானம் அளிக்கும் கிஷான் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 

இந்நிலையில் விவசாயிகளின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கணிக்க புதிய முறையை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2016-17ஆம் ஆண்டு நாட்டின் விவசாயிகளின் மொத்த வருமானத்தை அளவு கோளாக வைத்து விவசாயிகளின் வருமானத்தை கணக்கிட உள்ளது. அத்துடன் விவசாயிகளின் வருமானத்துடன் விவசாயம் சாராத வருமானத்தையும் மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள உள்ளது. 

ஏனென்றால் தற்போது கணக்கிடப்படும் வேளாண்துறையின் உற்பத்தியில் வேளாண்துறை, மீன் பிடித்தல் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளின் பிற வருமானங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆகவே இந்தப் புதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு தேசிய ஊரக வளர்ச்சி வங்கியின்  ‘அகில இந்திய ஃபினான்ஷியல் இன்குலுசன் சர்வே’ (All India Finanacial Inclusion Survey) என்ற அறிக்கையை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் விவசாயிகளின் வேளாண்துறை சாராத வருமானங்களும் கணக்கிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு 2016ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்வது தொடர்பாக அசோக் தல்வாய் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. 2022-23ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமான இரட்டிப்பு அடையவேண்டும் என்றால் இந்தியாவின் வேளாண்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2016-17ஆம் ஆண்டு முதல் 2022-23ஆம் ஆண்டு வரை 10.4 சதவிகிதமாக இருக்கவேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்தது. 

எனினும் கடந்த 5ஆண்டுகளாக வேளாண்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.9 சதவிகிதமாகவே உள்ளது. எனவே விவசாயிகளின் வருமான இரட்டிப்பாக வேண்டும் என்றால் இனி வேளாண்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 15 சதவிகிதமாக வளர வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com