தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை கிரீமி லேயர் பிரிவில் கொண்டு வர மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மண்டல் கமிஷன் அல்லது இந்திரா சாவ்நே வழக்கில், 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்தது. மண்டல் கமிஷன் அறிக்கைபடி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதாரரீதியில் முன்னேறிய வகுப்பினருக்கு (கிரீமி லேயர்) இந்த சலுகை கூடாது எனவும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது முதல் கிரீமி லேயர் முறை, நடைமுறையில் உள்ளது. அதற்கான உச்சவரம்பு அவ்வவ்போது உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருப்பதை போல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரையும் கிரீமி லேயர் பிரிவில் கொண்டு வரக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் சம்தா அந்தோலன் சமிதி என்ற அமைப்பு சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இடஒதுக்கீடு சலுகைகளை பெற்றவர்களே பெறுவார்கள், எஸ்.சி., எஸ்.டி பிரிவில் உள்ள ஏழைகளுக்கு செல்வதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. எஸ்.சி., எஸ்.டி பிரிவினரை கிரீமி லேயர் பிரிவில் கொண்டு வர மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மண்டல் கமிஷன் அறிக்கை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் தான் கிரீமி லேயர் முறையை கொண்டு வந்தது. எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு அல்ல. எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான சலுகைகளை நீர்த்துப் போக செய்யும் எண்ணமில்லை என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்ஹா தெரிவித்தார்.
எஸ்.சி., எஸ்.டி பிரிவினரை கிரீமி லேயர் பிரிவில் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே ஓபிசி பிரிவினருக்கு இருக்கும் கிரீமி லேயரையே நீக்க வலியுறுத்தி கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், தற்போது இந்த கோரிக்கை புதிதாக எழுந்துள்ளது.