இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான கவுதம் அதானிக்கு ‘Z’ பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்கியுள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் துறைமுக மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் தலைவர் 60 வயதான கவுதம் அதானி ஆவார். இவர் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகப் பணக்காரர்களிலும் டாப் 10 பட்டியலுக்குள் நீடிக்கும் முக்கிய தொழிலதிபர் ஆவார்.
இவருக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தல்கள் இருப்பதாக மத்திய உளவுத்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் அறிக்கை அளித்ததை அடுத்து, அவருக்கு மத்திய படைகளின் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) கமாண்டோக்களின் ‘Z’ பிரிவு விஐபி பாதுகாப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானிக்கு வழங்கப்படும் இந்த பாதுகாப்பு கட்டண அடிப்படையில் இருக்கும் என்றும் மாதத்திற்கு ரூ.15-20 லட்சம் அதானியிடம் வசூலிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 2013 ஆம் ஆண்டு முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) கமாண்டோக்களின் ‘Z+’ வகைப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.