காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரமாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் புதிய திட்டத்தை வகுக்கும்படி கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்டது. அதற்கான கெடு முடிந்தும் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இந்த வழக்கில் இதற்கு முன் நடந்த விசாரணையின்போது, மே 3 ஆம் தேதிக்குள் நதிநீர் பங்கீடு குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மே 3ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றது. ஆனால், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நீர்ப் பங்கீட்டுக்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. மேலும் கால அவகாசம் கோரியது.
‘காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகி விட்டது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதால் ஒப்புதல் பெற இயலவில்லை’ என நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டு வழக்கை மே 8ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ள நிலையில், காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாணப்பத்திரமாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், தொய்வில்லாமல், எல்லா தரப்பினரையும் கலந்து ஆலோசித்து செயல் திட்டத்தை வடிவைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் விசாரணையின் போது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் குறித்து விவாதிக்கப்படும். அதற்காக, 4 மாநில அரசுகளுக்கு பிரமாணப்பத்திர நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று இடைக்கால மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய அரசுக்கும், மே இறுதிவரை செல்லாமல் உடனடியாக 4 டிம்.சி தண்ணீரை திறக்க, கர்நாடகாவுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.