அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அதற்கான அறக்கட்டளையை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தி நகரில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தவிர ராமர் கோயில் கட்டுவதற்கு மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான அறக்கட்டளையை மத்திய அரசே அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில், ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.
அறக்கட்டளையை எப்படி அமைப்பது என்பது குறித்து சட்ட அமைச்சகம் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்டு, அதற்கான வழிமுறைகளை வகுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அறக்கட்டளைக்கான விதிகளை வகுக்க, அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரம் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை அறங்காவலர்கள் குழுவில் உள்துறை அல்லது கலாசார அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெறுவார்களா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.