சரியாக செயல்படாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 381 உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், ‘மனிதவள மேம்பாட்டுத்துறையின் 3 ஆண்டு நடவடிக்கைகள்; புதிய இந்தியாவுக்கான அடித்தளம்’ என்ற பெயரில் ஒரு கையேட்டை தயாரித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கையேட்டில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்,
"சரியாக செயல்படாத மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் பணியாற்றி வரும் 2,953 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 11,828 ஏ பிரிவு அதிகாரிகள், 19,714 பி பிரிவு அதிகாரிகளின் பணி பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சரியாக செயல்படாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 381 உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் 2 ஐ.பி.எஸ். உள்பட 25 ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் 99 பி பிரிவு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. 10 ஐ.ஏ.எஸ். உள்பட 21 அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். 5 ஐ.ஏ.எஸ். உள்பட 37 ஏ பிரிவு அதிகாரிகள் பணிநீக்கம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதுடன் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் 8 ஐ.ஏ.எஸ். உள்பட 199 ஏ பிரிவு அதிகாரிகளின் ஊதியத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது, தவறு செய்பவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது" என்றும் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.